15,Jan 2025 (Wed)
  
CH
SRILANKANEWS

வாகன இறக்குமதி அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு!

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லையென்றும், இது தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது தெரியவருவதாகவும், நிதி அமைச்சு, மத்திய வங்கி, இலங்கை சுங்கம் மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு உள்ளிட்ட சகல தரப்பினரும் இணைந்து இது தொடர்பில் முழுமையான பகுப்பாய்வினை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.  இந்தப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும் வரை இலத்திரனியல் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கான காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த நடைமுறையின் ஊடாக எதிர்பார்த்த நோக்கமான வெளிநாட்டுப் பணம் குறிப்பிடத்தக்களவு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதா, அல்லாவிட்டால் ஒரு சில நபர்கள் இந்த வசதிகளை தவறாகப் பயன்படுத்தி உள்ளனரா என்பதை ஆராய்ந்து விரிவான அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரத்தை வழங்கும் திட்டத்தின் காலத்தை 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக வெளியிடப்பட்ட 2368/24 இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் ஆராய்ந்த போதே அதன் தலைவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அமைய வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், 20 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு அதிகமான தொகையை இந்நாட்டுக்கு அனுப்பிவைக்கும் இலங்கையர்களுக்கு 12 மில்லியன் ரூபா வரையில் சொகுசு மோட்டார்வாகனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படுகின்றது. 

2023 பெப்ரவரி 10ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய முதல் தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் 2023 மே 31ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக காலம் நீடிக்கப்பட்டது. 

இது மீண்டும் 2024.01.24ஆம் திகதி வர்த்தமானி அறிவித்திலின் ஊடாக மேலும் நீடிக்கப்பட்டது.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்த நபர்கள் உள்ளிட்ட சகல தகவல்களையும் வழங்குமாறு நிதி அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தபோதும், இரகசிய மற்றும் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வழங்குவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவேண்டி இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்திருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

இருந்தபோதும், இத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மையோ அல்லது உரிய ஒழுங்குமுறைப்படுத்தலோ காணப்படவில்லையென குழு தெரிவித்தது.

இந்த நிலைமையின் ஊடாக பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் பல குழுவிடம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த வரிச்சலுகையின் ஊடாக 100 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் தொடக்கம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதுவரையில் 1019 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இவற்றின் ஊடாக 109.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இங்கு புலப்பட்டது. அத்துடன், இதுவரை பெறப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் பெறுமதி 46 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அனுப்பப்பட்ட பணம் ஒரேயடியாக கணக்கில் வைப்பிலிடப்பட்டபோதும், வெளிநாட்டில் உள்ள பணியாளர்கள் இந்த வசதியைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதால், இந்த முறையின் ஊடாக பல்வேறு வணிகர்கள் பணச் சலவை செய்வதற்காக இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். 

அத்துடன், பொதுவான பணிகளை மேற்கொள்ளும் நபர்கள் இந்தளவு பெறுமதியான வாகனத்தை இறக்குமதி செய்கின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பின்னணியில் வாகனத்தை இறக்குமதி செய்வதற்குக் காணப்படும் ஒரேயொரு வாய்ப்பு இது என்பதால் மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், இந்தத் திட்டத்தில் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நபர்கள் என்ற பெயரில் (Facilitator) ஒரு தரப்பினர் இருப்பதாகவும், அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லையென்றும் தலைவர் குறிப்பிட்டார். அதன்படி, அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக வழங்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் அனைத்துத் தகவல்களையும் பரிசீலித்து இந்த வர்த்தமானிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டுமென அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அந்நியச்செலாவணி சட்டத்தின் கீழ் 2371/48 , 2371/49 மற்றும் 2371/50 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் மூன்றுக்கும், 2003ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நிதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2369/27, 2374/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது. 




வாகன இறக்குமதி அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு