20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

யாழ் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ள அதிகாரிகள் குழு..!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரீ.கனகராஜ் அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிடிவதை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாக தற்கொலைக்கு முயற்சித்தமையின் ஊடாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடி வதை மற்றும் தொலைபேசி ஊடான பாலியல் துன்புறுத்தல்கள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிருந்தன.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்றைய தினம் கூடிய பல்கலை கழகத்தின் ஒழுக்காற்று குழுவினர் மாணவர்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி, மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் தகவல்கள், அலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை காவற்துறையின் இணையவழி குற்றத்தடுப்பு பிரிவினர் ஊடாக விசாரணை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




யாழ் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ள அதிகாரிகள் குழு..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு