ஐ.பி.எல் டி20 லீக்கில் விளையாடும் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல் டி20 லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்றான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த 2 தினங்களாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இலச்சினை திடீரென நீக்கப்பட்டது.
இது கிரிக்கெட் விமர்சகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த அணியின் சில வீரர்கள் தங்களது கவலையை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி புதிய இலச்சினையை இன்று (14) அறிமுகம் செய்துள்ளது.
புதிய இலச்சினையில் இடம்பெற்றுள்ள சிங்கம், RCB அணி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றும், துணிச்சலாக, அச்சமில்லாமல் அடுத்த தொடரை எதிர்நோக்கி இருப்பதையும் காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல், எளிமை, ஐ.பி.எல் அணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த அணி எனும் பெயரையும் அந்த இலச்சினை உணர்த்தி நிற்கின்றது.
இதனிடையே, RCB அணியின் புதிய இலச்சினை வெளியீடு குறித்து அந்த அணியின் தலைவர் சஞ்சீவ் சாவ்லா கூறுகையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுடன் எப்போதும் இருப்போம். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் புதிய இலச்சினை வடிவமைக்கப்பட்டது.
இம்முறை ஐ.பி.எல் தொடரில் துணிச்சலாகவும், உற்சாகமாகவும், கொண்டாட்டத்துடன் விளையாடுவதற்கும், உயிர்ப்புடன் நீடிக்கவும் இந்த இலச்சினையில் மாற்றம் செய்வது அவசியம் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
ஐந்து முறை பிளே ஓப் (play off) சுற்றுக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐ.பி.எல் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
0 Comments
No Comments Here ..