23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் மஹா சிவராத்திரித் திருவிழா!- ஏற்பாடுகள் குறித்து மக்களுக்கான அறிவிப்பு

மன்னார், திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழாவின் ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள மஹா சிவராத்திரித் திருவிழாவின் ஏற்பாடுகள் தொடர்பாக, குறிப்பாக போக்குவரத்து , சுகாதாரம் , மின்சார வசதி, குடிநீர், பாதுகாப்பு, உணவு போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கு அரச மற்றும் தனியார் பேருந்து முழுமையான சேவையை வழங்குவதற்கு இருதரப்பும் முன்வந்துள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக 50 அரச பேருந்து மற்றும் 50 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.

சுகாதாரம் மற்றும் வைத்திய சேவைக்கு 20ஆம் திகதியிலிருந்து 4 வைத்தியர்கள் சேவையில் ஈடுபடவுள்ளதோடு, ஒரு அம்பியூலன்ஸ் வண்டி திருக்கேதீச்சரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

மேலும் ஆலயச் சுற்றுச் சூழலில் பொலித்தீன் மற்றும் புகைத்தல், போதைப் பொருள் பாவனைகள் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அவசரத் தேவைக்காக மாந்தை மற்றும் மடுப் பிரதேச செயலகங்களில் இருந்து தாங்கி வண்டி மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் திருவிழாவைச் சிறப்பிக்கும் முகமாக கலாசார நிகழ்வுகளும் சிறப்பு சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் சிவராத்திரித் திருவிழா சிறப்பாக அமைவதற்கு திணைக்களங்களின் அலுவலர்கள், ஆலய பரிபாலன சபையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மக்களின் வரவை கருத்திற்கொண்டு போக்குவரத்து ஒழுங்குகள், சுகாதாரம், தண்ணீர் பந்தல்கள், உணவு விநியோகம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு அமைய ஆலய பரிபாலன சபை, சுகாதார பணிமனை, பிரதேச செயலகம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து திருக்கேதீச்சர திருவிழாவிற்கு முதல் நாள் இவ்விடயம் குறித்து முன்னாயத்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் புகையிரத தினைக்களத்திடமும் விசேட சேவையை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. அவர்கள் அதைச் செய்யும் பட்சத்தில் தெற்குப் பகுதியில் உள்ள மக்களும் இலகுவாக வந்து செல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் 300 பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் நிலமையைப் பொறுத்து மேலதிகமாக பாதுகாப்புத் தேவை ஏற்பட்டால் இராணுவத்தினரின் உதவியும் பெறப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

இவ்வருட சிவராத்திரி தினம் மிகவும் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெறுவதற்கு பொது மக்களும் அதிகாரிகளும் பரிபூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குறித்த கூட்டத்தில் திருக்கேதீச்சர திருப்பணிச் சபையின் இணைச்செயலாளர் எஸ்.இராமக்கிருஸ்ணண், மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீபன், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எம்.முஜாஹிர், மன்னார் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரி எம்.திலீபன், மின்சார சபை, சுகாதார திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, திருக்கேதீச்சர நிர்வாகத்தினர் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் மஹா சிவராத்திரித் திருவிழா!- ஏற்பாடுகள் குறித்து மக்களுக்கான அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு