கணக்கு வாக்கெடுப்புக்கான சட்டத் திருத்தம் தொடர்பில், அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் குழு இன்றைய தினம் ஆராயவுள்ளது.
நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையூடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
367 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, குறித்த திருத்தத்தை அரசாங்கம் வாக்கெடுப்புக்கு முன்வைத்துள்ளதாக, அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
இன்று கூடவுள்ள அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் அனுமதி அந்தத் திருத்தத்திற்கு அளிக்கப்படும் பட்சத்தில், எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
அத்துடன், இது தொடர்பான விவாதம் அன்றைய தினம் காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை இடம்பெறுமென, நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம், பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் என்பனவற்றையும் இன்றைய தினம் கூடவுள்ள அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் குழு ஆராயவுள்ளது.
இந்தச் சட்டமூலங்களுக்கான அனுமதி இன்று அளிக்கப்படும் பட்சத்தில், அவற்றையும் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, மத்தியவங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்த, அந்த வங்கியின் அவதானிப்புகள் அண்மையில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
அந்த அவதானிப்புகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில், அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் குழு கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..