23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மிளகு விலை வீழ்ச்சி!ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பணிப்புரை

மிளகு விலை வீழ்ச்சியடைவதற்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழுவே, இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு, இன்றைய தினம் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன ராஜகருணா தலைமையில் கூடியது.

மிளகு இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளபோதும் மிளகின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து காணப்படுவதற்கான காரணம் குறித்து இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இங்கு கேள்வியெழுப்பியிருந்த நிலையிலேயே, இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பதற்கு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை இணக்கம் தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் நேற்றைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகை, பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றி அனுப்புவதற்கான செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் சுற்றுலாத்துறையின் தொழில் முயற்சியாளர்கள் வீட்டுத் தளபாடங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை நீக்குவது தொடர்பான கட்டளைக்கும், துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சுற்றாலத்துறையினரை ஊக்குவிக்கும் நோக்கிலேயே, அந்த செஸ் வரி விலக்கை வழங்க தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன் 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான முதலீட்டை கொண்டுவரும் முதலீட்டாளர்கள் தமது கட்டுமான காலப்பகுதியில் இறக்குமதி செய்யும் ஏதேனும் பண்டமொன்றுக்கு விதிக்கப்படும் செஸ் வரியை தள்ளுபடி செய்வது தொடர்பான கட்டளைக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் நேற்றுத் தெரிவித்துள்ளது.




மிளகு விலை வீழ்ச்சி!ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பணிப்புரை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு