2020 ஆம் ஆண்டுக்கான, உலகின் மிகச்சிறந்த 500 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Times Higher Education எனும் இணையத்தளத்தினால் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த இணையத்தளம், வருடாந்தம் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் பல்கலைக்கழகங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
ஐந்து அடிப்படை விடயங்களைக் கருத்திற் கொண்டு உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
கற்றல் சூழல் மற்றும் கற்பித்தல், ஆராய்ச்சி, ஆய்வுகளின் தாக்கம், ஊழியர்கள் மற்றும் சர்வதேச தரம் ஆகிய ஐந்து காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் முதலாவது இடத்திலும், அமெரிக்காவின் கலிஃபோர்னியா தொழிநுட்பப் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்திலும், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம் உலகின் மிகச்சிறந்த 500 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குள், பேராதனைப் பல்கலைக்கழகம் மாத்திரமே, உலகின் மிகச்சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..