2016 ஆம் ஆண்டில் துருக்கியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த தீவிரவாத குழுவொன்று தொடர்பில் துருக்கி தூதுவர் தகவல் வழங்கிய போதிலும், உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் பதில் மேலதிக செயலாளர் மாலிகா ஷ்ரமதி பீரிஸ், ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்கிய போது, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் தீவிரவாத மறுசீரமைப்பு பிரிவின் பதில் பிரதிப் பணிப்பாளர் மகேஷா பாரதி ஜயவர்தன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் பதில் மேலதிக செயலாளர் மாலிகா ஷ்ரமதி ஆகியோர் நேற்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
துருக்கியின் FETO என்ற தீவிரவாத குழுவைச் சேர்ந்த ஒரு குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக, இலங்கைக்கான துருக்கி தூதுவர் துஞ்சாவினால் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி, 12 பக்கங்கள் அடங்கிய கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கடிதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
துருக்கி தூதுவரினால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதம் தமது அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றிருந்ததாக வெளிவிவகார அமைச்சின் குறித்த உயர் அதிகாரி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, வெளிவிவகார அமைச்சின் தீவிரவாத மறுசீரமைப்பு பிரிவின் செயலாளராக தற்போதைய வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்கவே கடமையாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், குறித்த கடிதம் தீவிரவாத மறுசீரமைப்பு பிரிவுக்கு ஒப்படைக்கப்படாது, வெளிவிவகார அமைச்சின் மேற்கு பிரிவுக்கு ஏன் அனுப்பப்பட்டது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இதன்போது கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் மகேஷா பாரதி ஜயவர்தன, குறித்த கடிதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதி, வெளிவிவகார அமைச்சின் தீவிரவாத மறுசீரமைப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவிற்குப் பொறுப்பான செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சின் தீவிரவாத மறுசீரமைப்பு பிரிவின் பதில் பிரதிப் பணிப்பாளர் மகேஷா பாரதி ஜயவர்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.













0 Comments
No Comments Here ..