தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை சர்வதேசத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து அதில் கிடைக்கும் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முயற்சித்ததோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த அரசாங்கத்தில் வெளியிடப்பட்ட வரவு – செலவு திட்டத்தில் அரச செலவுகளுக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அரசாங்கம் தமக்கு மேலும் 367 ரூபாய் பில்லியன் நிதியை பெற்றுக் கொடுக்குமாறு குறிப்பிட்டே கணக்கறிக்கையை தயார் செய்தது.
அரசாங்கத்தினால் புதிய செயற்திட்டங்கள் கொண்டுவரப்படாத நிலையில் இந்த நிதிக்கான அவசியம் என்ன? அரசாங்கம் இதிலுள்ள சிக்கல்களை கருத்திற் கொண்டுதான் அதனை சபையில் சமர்ப்பிக்காமல் இருந்துள்ளது. அவ்வாறு சமர்ப்பித்திருந்தாலும் அது நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்கு வைத்துதான் அரசாங்கம் இந்த இடைக்கால கணக்கறிக்கையை தயார் செய்திருக்குமா என்பது தொடர்பாக எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் மக்களின் நலன் கருதி பல சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் அதனை செய்யாது இருக்கின்றது.
தேர்தல் பிரசாரங்களின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கூட அரசாங்கம் நிறைவேற்றாது இருக்கின்றது. பெறுமதிசேர் வரியை குறைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. ஐக்கிய தேசியக் கட்சி அதிக வருமானம் ஈட்டும் நபர்களிடமிருந்தே வரியை அறவிட்டது.
ஆனால் தற்போதைய அரசாங்கம் வற்வரியை குறைத்து அவர்களுக்கு சலுகையை பெற்றுக்கொடுத்துள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார். இந்த விடயம் தொடர்பாக இதுவரையில் எந்த முயற்சியையாவது எடுத்துள்ளாரா?
ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் சர்வதேசத்திடமிருந்து எமக்கு கிடைக்கும் உதவிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கின்றது.
சர்வதேசத்திடம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்பதற்காகவே ஜெனீவாவின் பிரேணைக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டால் சர்வதேசத்தின் எதிர்ப்பை இலங்கை சந்திக்க நேரிடும்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பாக தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.













0 Comments
No Comments Here ..