யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகள் சபை நிதியை ஒதுக்கீடு செய்து ஊரடங்கு வேளையில் தொழிலிழந்து வீடுகளில் இருக்கும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உதவிப் பொருள்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா இதனை தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தமது மாதாந்தக் கொடுப்பனவை ஒதுக்கீடு செய்து வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உதவித் திட்டங்களை வழங்கத் தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் மாவை சோ.சேனாதிராசா மேலும் தெரிவித்ததாவது;
யாழ்ப்பாணத்தில் தற்போது தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் நாளாந்த தொழில் செய்து வாழ்வாதாரத்தை நிறைவு செய்யும் குடும்பங்களைச் சேர்ந்தோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நானும் ஆராய்ந்தோம்.
அதனடிப்படையில் உள்ளூராட்சி சபைகள் ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ளவாறு சபை நிதியை ஒதுக்கீடு செய்து செய்து ஊரடங்கு வேளையில் தொழிலிழந்து வீடுகளில் இருக்கும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உதவிப் பொருள்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருடன் நான் கலந்துரையாடி அவர்கள் இதற்கான அனுமதியை தாமதமின்றி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்தத் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள மாநகர சபை, நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் நடைமுறைப்படுத்துவார்கள் என்றார்.
0 Comments
No Comments Here ..