22,Aug 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொரோனாவைரஸை கட்டுப்படுத்த உலகத்தலைவர்கள் முன்வரவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்

கொரோனா வைரஸ் பரவல் என்பது குறித்தவொரு நாட்டிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட தேசிய பிரச்சினையல்ல. மாறாக இது உலகளாவிய தொற்றுநோய் என்பதைப் புரிந்துகொண்டு, அதனை எதிர்கொள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு உலகத் தலைவர்களும் சர்வதேச அமைப்புக்களும் முன்வர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலால் உலகளவில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இச்சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் WION News ஊடகத்தின் கேள்விகளுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருக்கிறார்.

அதில் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கும்போது,

உண்மையில் நாடு முடக்கப்பட்டுள்ளமை வெற்றியளித்திருக்கிறது. அதேபோன்று சுகாதாரத்துறையினரும், பாதுகாப்புப் பிரிவினரும் மிகவும் சிறப்பான பணியினை முன்னெடுத்து வருகின்றனர். மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர். எனவே நாடு முடக்கப்பட்டதன் நோக்கம் வெற்றியளித்திருக்கிறது.

ஆனால் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணப்பட்ட நிலையில் உரிய பரிசோதனை உபகரணங்கள், முகக்கவசங்கள், சுவாசக்கருவிகளை அரசாங்கம் ஜனவரி மாதத்திலேயே சேகரித்து வைக்கவில்லை. அதேபோன்று இந்த முடக்கத்தை ஊரடங்கை பகுதியளவில் அமுல்படுத்தும் அதேவேளை, அனைவரையும் தொடர்ந்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஜேர்மனி, தென்கொரியாவைப் போன்று செயற்பட வேண்டும். நாடு முடக்கப்பட்ட வேளையில் இதற்கான தயார்ப்படுத்தல்கள் காணப்படாத போதிலும், தற்போது பகுதியளவில் ஊரடங்களைத் தளர்த்தி அதிக பரிசோதனைகளைச் செய்வதுடன், பொருளாதாரத்தை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உலகலாவிய ரீதியில் எதிர்கொள்ளப்பட்ட மிகப்பாரிய சவால் இது.

‘இரண்டாம் உலக மகாயுத்தம் உள்ளிட்ட எந்த யுத்தத்திலும் எதிரி யார் என்பதை அறிவோம். இஸ்லாமிய அரசின் தாக்குதலை எதிர்கொண்ட போதும் எதிரியை இனங்காண முடிந்தது. ஆனால் இவ்விடயத்தில் யார் எதிரி என்பதையோ, யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதையோ எவராலும் நிர்ணயிக்க முடியாது. பூகோள மயமாக்கலினால் ஏற்பட்ட வளர்ச்சிகளைக் கண்ட நாம், தற்போது அதன் பாதகத்தன்மையைக் காண்கிறோம். உலகநாடுகளில் பொருளாதாரம் முழுவதுமாக சீர்குலைந்திருக்கின்றன.

இத்தகையதொரு தருணத்தில் ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார ஸ்தாபனம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட ஏதேனுமொரு அமைப்பு ஒன்றிணைந்நு இச்சவாலை எதிர்கொள்வதற்கான முதற்படியை எடுத்து வைக்க வேண்டும்.

ஆனால் அத்தகைய செயற்பாடு இன்னமும் இடம்பெறவில்லை.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போதும், ஏனைய சவால்களின் போதும் உலகத்தலைவர்கள் அதனைக் கையாள்வதற்கு முன்வந்தார்கள். 2009 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மந்தநிலையொன்று ஏற்பட்டபோதும் அதற்குத் தீர்வுகாண தலைவர்கள் முன்வந்தார்கள். அதேபோன்றதொரு நிலை தற்போது அவசியம். ஏனெனில் இது தேசிய ரீதியான பிரச்சினையல்ல. மாறாக இது ஒரு உலகளாவிய தொற்றுநோய் எனபதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனை எதிர்கொள்வது உலகின் ஒன்றிணைந்த பொறுப்பாகும் என்றார்.




கொரோனாவைரஸை கட்டுப்படுத்த உலகத்தலைவர்கள் முன்வரவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு