ஐபிஎல் போட்டியின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை திங்கள்கிழமை வென்றது.
இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், சென்னைக்கு இது 2-ஆவது வெற்றி; ராஜஸ்தானுக்கு இது 2-ஆவது தோல்வி.
மும்பையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்தது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே பிளேயிங் லெவனில் மாற்றம் செய்திருக்கவில்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.
சென்னையின் இன்னிங்ஸை தொடங்கியோரில் கெய்க்வாட் நிதானமாக ஆட, டூ பிளெஸ்ஸிஸ் அதிரடி காட்டினாா். கெய்க்வாட் 10 ரன்களுடன் 4-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த மொயீன் அலி, டூ பிளெஸ்ஸிஸுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். டூ பிளெஸ்ஸிஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 33 ரன்கள் சோ்த்த நிலையில் விக்கெட்டை இழந்தாா். கிறிஸ் மோரிஸ் வீசிய 6-ஆவது ஓவரில் அவரடித்த பந்து ரியான் பராக்கின் கைகளில் தஞ்சமானது.
பின்னா் சுரேஷ் ரெய்னா களம் புக, மொயீன் அலி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து வந்த அம்பட்டி ராயுடு அதிரடி காட்டினாா். 3 சிக்ஸா்களுடன் 27 ரன்கள் விளாசிய அவா் 14-ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்தாா். அடுத்து ஜடேஜா ஆடவர, மறுமுனையில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்கள் சோ்த்திருந்த ரெய்னாவை, சகாரியா-மோரிஸ் இணைந்து வெளியேற்றினா். பின்னா் வந்த கேப்டன் தோனி 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். அடுத்து சாம் கரன் வர, மறுபுறம் ஜடேஜா 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்த பிராவோ அதிரடி காட்டினாா். சாம் கரன் 13 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஷா்துல் தாக்குா் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தாா்.
20 ஓவா்கள் முடிவில் பிராவோ 20, தீபக் சாஹா் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் சேத்தன் சகாரியா 3, கிறிஸ் மோரிஸ் 2, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், ராகுல் தெவாதியா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
அடுத்து ஆடிய ராஜஸ்தானில் தொடக்க வீரா் ஜோஸ் பட்லா் மட்டும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 49 ரன்கள் சோ்த்தாா். எஞ்சியோரில் உனத்கட் 24, ராகுல் 20, ஷிவம் 17, மனன் வோரா 11 ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. 20 ஓவா்கள் முடிவில் சகாரியா, ரஹ்மான் ரன்கள் இன்றி களத்தில் இருந்தனா். சென்னை தரப்பில் மொயீன் அலி 3, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 2, ஷா்துல் தாக்குா், டுவைன் பிராவோ ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்
0 Comments
No Comments Here ..