12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில்பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ....

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் அரைசதம் விளாச, பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.


இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் முருகன் அஷ்வின் நீக்கப்பட்டு ரவி பிஷ்னாய் தேர்வானார். மும்பை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.


ரோகித் அரைசதம்: மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஜோடி துவக்கம் தந்தது. தீபக் ஹூடா ‘சுழலில்’ குயின்டன் (3) சிக்கினார். ஹென்ரிக்ஸ் வீசிய 5வது ஓவரில் ரோகித் ஒரு பவுண்டரி அடிக்க, மும்பை அணி 6 ஓவரின் முடிவில் 21 ரன் எடுத்திருந்தது. இது, இந்த சீசனில் ‘பவர் பிளே’ ஓவரில் பதிவான மிகக் குறைந்த ஸ்கோரானது. ரவி பிஷ்னாய் ‘சுழலில்’ இஷான் கிஷான் (6) அவுட்டானார்.


பின் இணைந்த ரோகித், சூர்யகுமார் யாதவ் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. பேபியன் ஆலன் வீசிய 8வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த ரோகித், ஆலன், ஹூடா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சூர்யகுமார், அர்ஷ்தீப் சிங் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். பிஷ்னாய் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரோகித் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்த போது பிஷ்னாய் பந்தில் சூர்யகுமார் (33) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ரோகித் (63), ஷமி ‘வேகத்தில்’ வெளியேறினார்.


அர்ஷ்தீப் பந்தில் போலார்டு, ஒரு சிக்சர் அடித்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (1), குர்னால் பாண்ட்யா (3) நிலைக்கவில்லை.


மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்தது. போலார்டு (16) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் சார்பில் ஷமி, பிஷ்னாய் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


ராகுல் அபாரம்: சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. குர்னால் பாண்ட்யா வீசிய 2வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த ராகுல், பும்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். குர்னால் பந்தில் சிக்சர் விளாசிய அகர்வால், பவுல்ட் பந்தில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது ராகுல் சகார் பந்தில் அகர்வால் (25) அவுட்டானார்.

பொறுப்பாக ஆடிய ராகுல் அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கிறிஸ் கெய்ல், ஜெயந்த் யாதவ் வீசிய 13வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். பவுல்ட் வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல் வெற்றியை உறுதி செய்தார். பஞ்சாப் அணி 17.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (60), கெய்ல் (43) அவுட்டாகாமல் இருந்தனர்.


 




மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில்பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு