13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி...

விறுவிறுப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி பந்தில் அசத்திய பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. டில்லி அணி ஏமாற்றம் அடைந்தது.


ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. டில்லி அணியில், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகிய தமிழக ‘சுழல்’ வீரர் அஷ்வினுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தேர்வானார். பெங்களூரு அணியில் நவ்தீப் சைனி, டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ரஜத் படிதர், டேனியல் சாம்ஸ் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.


கோஹ்லி ஏமாற்றம்: பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 30 ரன் சேர்த்த போது அவேஷ் கான் பந்தில் கோஹ்லி (12) போல்டானார். இஷாந்த் சர்மா ‘வேகத்தில்’ படிக்கல் (17) அவுட்டானார். பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய மேக்ஸ்வெல், அமித் மிஸ்ரா, அக்சர் படேல் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இவர், 25 ரன் எடுத்திருந்த போது அமித் மிஸ்ரா ‘சுழலில்’ சிக்கினார்.


டிவிலியர்ஸ் அபாரம்: பின் இணைந்த ரஜத் படிதர், டிவிலியர்ஸ் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. மிஸ்ரா, இஷாந்த் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார் படிதர். ரபாடா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டிவிலியர்ஸ், அக்சர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். நான்காவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது அக்சர் பந்தில் படிதர் (31) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் (6) நிலைக்கவில்லை. அவேஷ் கான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டிவிலியர்ஸ், ஐ.பி.எல்., அரங்கில் 40வது அரைசதமடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்டார்.


பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன் குவித்தது. டிவிலியர்ஸ் (75 ரன், 5 சிக்சர்), சாம்ஸ் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.


ஹெட்மயர் விளாசல்: மணல் புயல் காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு ஷிகர் தவான் (6), ஸ்டீவ் ஸ்மித் (4) ஏமாற்றினர். பிரித்வி ஷா (21), ஸ்டாய்னிஸ் (22) ஆறுதல் தந்தனர். ஹர்ஷல் படேல் வீசிய 12வது ஓவரில் கேப்டன் ரிஷாப் பன்ட் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார். சிராஜ் வீசிய 15வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ஹெட்மயர், ஜேமிசன் வீசிய 18வது ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்டார். அபாரமாக ஆடிய இவர், 23 பந்தில் அரைசதமடித்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. சிராஜ் வீசிய 20வது ஓவரின் முதல் 5 பந்தில் 8 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் சிக்சர் தேவைப்பட்ட நிலையில் ரிஷாப் பன்ட் பவுண்டரி அடித்தார். டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ரிஷாப் (58), ஹெட்மயர் (53) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஹர்ஷல் படேல் 2 விக்கெட் கைப்பற்றினார்.





பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு