கொழும்புத்துறைமுக நகரத்தினால் வழங்கப்படும் தனித்துவமான வாய்ப்புக்களையும் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறும், அங்கு முதலீடு செய்வதற்கு முன்வருமாறும் அனைத்து உலகத்தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை மூதலீட்டுப் பேரவையின் 2021 ஆம் ஆண்டிற்கான மாநாடு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமான ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இன்று 7ஆம் ,நாளை 8 ஆம்,நாளை மறுதியம் 9 ஆம் திகதிகளில் நடைபெறும் இந்த இணையவழி மாநாட்டில் உலகளாவிய ரீதியில் 65 நாடுகள் கலந்துகொள்கின்றன.
இன்றைய தினம் மாநாட்டை இணையவழியில் ஆரம்பித்துவைத்து, உரையாற்றிய ஜனாதிபதி,
இலங்கையினால் பல்வேறு துறைகள் சார்ந்தும் வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தக்கூடிய முக்கிய நிகழ்வாக இந்த மாநாடு அமையும். இந்த மாநாட்டின் மூலம் இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தகப் பேரவை, கொழும்புப்பங்குச்சந்தை ஆகியவை மாத்திரமன்றி, முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக சமூகத்தினர் என அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றார்கள்.
இது எமது பொருளாதாரத்தின் முதலீட்டு நிலவரம் தொடர்பான கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கும் முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங்காண்பதற்கும் வழிவகுக்கும்.
அதுமாத்திரமன்றி மூலதனச்சந்தை மற்றும் கடன்சந்தை ஆகியவை தொடர்பில் ஆராய்வதற்கும் வாய்ப்பேற்படுத்தும். இலங்கைக்கு மிகவும் அவசியமானதும் பொருத்தமானதுமான சந்தர்ப்பத்திலேயே இந்த முதலீட்டு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
ஏனெனில் 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கை தற்போதைய அதன் வருமானத்தை விடவும் இருமடங்கு வருமானத்தைப் பெறுவதற்கும் பொருளாதார ரீதியில் புதியதொரு மறுசீரமைப்பை அடைந்துகொள்வதற்கும் அவசியமான செயற்திட்டங்களையும் யோசனைகளையும் எனது அரசாங்கம் கொண்டிருக்கிறது.
எமது நாட்டின் தனித்துவமான கேந்திர முக்கியத்துவமுடைய அமைவிடம், அரசியல் உறுப்பாடு, வலுவாக சமுதாயக்கட்டமைப்பு, அறிவுடையதும் செயற்திறன் வாய்ந்ததுமான தொழிற்படை மற்றும் உயர்வாழ்க்கைத்தரம் ஆகியவை தற்போதைய இலங்கையின் சக்திவாய்ந்த கூறுகளாகும்.
எனவே பொருளாதார மேம்பாடு தொடர்பான எமது எதிர்கால இலக்குகளை அடைந்துகொள்வதற்கு இந்த அடிப்படைக்கூறுகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதுமாத்திரமன்றி நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளில் தொடர்ச்சியாக முன்னேற்றகரமான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் மூலமான சக்திவலு உள்ளீர்ப்பை அதிகரித்தல், வீதி மற்றும் புகையிரதப்பாதை மறுசீரமைப்புக்கள், நாட்டின் துறைமுகங்களை மேலும் விஸ்தரித்தல் ஆகியவையும் இதில் உள்ளடங்குகின்றன. நிலையான நுண்பாகப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் நிலைபேறானதும் வலுவானதுமான கொள்கைகளைப் பேணுவதற்கான உறுதிப்பாட்டை நாம் கொண்டிருக்கின்றோம்.
0 Comments
No Comments Here ..