26,Apr 2024 (Fri)
  
CH
விளையாட்டு

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அவுஸ்ரேலிய அணி மோதல்

ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் (17) நடைபெற்று முடிந்திருக்கும் இந்தியா – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும், இந்திய கிரிக்கெட் அணி இந்த வெற்றியுடன் ஒருநாள் தொடரினையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டி ஆரம்பமானது. 

இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார். 

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினர். இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா 42 ஓட்டங்கள் எடுக்க, மற்றைய ஆரம்ப வீரர் சிக்கர் தவான் அவரது 29 ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 96 ஓட்டங்கள் பெற்று சதத்தை தவறவிட்டார். 

இவர்களைத் தொடர்ந்து இந்திய அணிக்கு அதன் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகியோரும் அரைச்சதங்கள் மூலம் பங்களிப்புச் செய்தனர். இதில், விராட் கோஹ்லி 78 ஓட்டங்கள் எடுக்க, அதிரடியாக ஆடிய ராகுல் 52 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்கள் குவித்தார். 

பின்னர், இந்த வீரர்களுடன் துடுப்பாட்ட உதவியோடு இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவிற்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களை குவித்தது. 

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான அடம் ஸம்பா 3 விக்கெட்டுக்களைச் சுருட்ட, கேன் ரிச்சர்ட்ஸன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். 

இந்திய அணியின் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக அவுஸ்திரேலிய அணிக்கு, 50 ஓவர்களில் 341 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 304 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது. 

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்திருந்த ஸ்டீவ் ஸ்மித் அவரின் 24ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 98 ஓட்டங்கள் பெற்றிருக்க, மார்னஸ் லபுஷேன் தனது முதலாவது ஒருநாள் இன்னிங்ஸில் 46 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் அசத்தலாக செயற்பட்ட வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி 77 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் லோக்கேஷ் ராகுல் தெரிவு செய்யப்பட்டார். 

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (1-1 என) சமநிலை அடைந்திருக்கும் நிலையில், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் கடைசியுமான போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கின்றது. 






மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அவுஸ்ரேலிய அணி மோதல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு