ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கரோலினா தோட்டப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வட்டவளை பகுதியிலிருந்து கரோலினா தோட்டப் பகுதியை நோக்கிப் பயணித்த குறித்த முச்சக்கர வண்டி, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன் போது சாரதி உட்பட நான்கு பேர் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், காயங்களுக்கு உள்ளான மூவர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடும் ஏற்றம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி, இயந்திர கோளாறு காரணமாக பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..