ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு வந்து ராஜபக்சவினரை பாதுகாத்து வருகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் ரோஹன பண்டார (Rohana Bandara) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் எண்ணெய் கப்பல் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போதே வாசுதேவ நாணயக்கார அவரை ஆளும் கட்சி வரிசையில் வந்து அமருமாறு அழைத்தார்.
அரசாங்கம் பேச வேண்டியதை ரணில் விக்ரமசிங்க பேசி வருவதே இதற்கு காரணம். அவர் அரசாங்கத்துடன் உடன்பாட்டை செய்துக்கொண்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. அவரது உரைகளில் அது தெளிவாக புலப்படுகிறது.
நாட்டில் வாழும் மக்களின் துயரங்களை அறிந்த, நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்கும் சஜித் பிரேமதாச போன்ற ஒருவர் நாட்டின் ஆட்சியாளராக வருவதை தடுத்து, தமது பிரபுத்துவ வகுப்பினரை பாதுகாத்து அவர்களுக்காக குரல் கொடுப்பதே இவர்களின் நோக்கம்.
இதனையே ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்தும் செய்கிறார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஒரு காலத்தில் ரணில் விக்ரமசிங்கவை நிராகரித்து கடுமையாக விமர்சித்தவர்.
அவருக்கு கிடைத்துள்ள பொதுச் செயலாளர் பதவியை வைத்துக்கொண்டு ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க முயற்சித்து வருகிறார். புத்தளத்திற்கு வந்தால், சுடுவேன் என்று கூறி, ஒரு காலத்தில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை அனைவரும் அறிவார்கள், இதனால், மூழ்கும் கப்பலில் எவரும் ஏற மாட்டார்கள்.
1994 ஆம் ஆண்டு நாட்டின் பிரதான பலமான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது.
எனினும் தற்போது ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே இருக்கும் கட்சியாக அந்த கட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு வந்து ராஜபக்சவினரை பாதுகாத்து வருகிறார்.
0 Comments
No Comments Here ..