சீனாவில் corona வைரஸினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்த மூன்று இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் அலுவலர் ஒருவர் தெரிவித்த கருத்தினைக் கோடிட்டு இந்தத் தகவலை, ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாடு திரும்பிய இந்த மாணவர்கள் மூவரும் அந்த வைரஸ் பரவுகையினால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, corona வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பிராந்தியத்தினுள், மேலும் 25 இலங்கை மாணவர்கள் உள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் அந்த அலுவலர் குறிப்பிட்டுள்ளதாக, அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மேலதிக உதவி தேவைப்படுமிடத்து சீனாவுக்கான இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 830க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்த நாட்டில் தேசிய அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை சுமார் 60 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மத்திய சீனாவின் 10 நகரங்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சீனாவின் பிரபல சுற்றுலாத்தளமான டிஸ்னி ரிசோர்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதேவேளை, சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த இருவர், இந்திய வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வகை வைரஸ்ஸினால், உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவுக்குள் அந்த வைரஸ் பரவாத வகையில், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சீனாவிலிருந்து இந்தியாவின் மும்பை நகருக்குச் சென்றடைந்த பயணிகள் இருவருக்கு உடல்நலச் சீர்கேடு இருந்ததாகவும் அதனாலேயே வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள அந்தப் பயணிகள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத் தக்கது.
அதேவேளை, சீனாவின் தலைநகர் பீஜிங்க்கில் நடைபெறவிருந்த இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவுக்கான இந்தியத் தூதரகம் எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
எனினும் தற்போது சீனாவில் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாகவே, இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தை இந்தியத் தூதரகம் ரத்து செய்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று நாட்டுக்குப் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையொன்றை நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அது குறித்து விமான நிலையத்திலுள்ள விசேட சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு, அந்தப் பயணிகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக விமான நிலையத்தில் விசேட வைத்திய பீடமொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் நாட்டில் இருப்பது குறித்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் பதிவாகவில்லையென்று, பவித்திரா வன்னியாராச்சி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சீனக் குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதும், அந்தக் குழந்தை சாதாரண காய்ச்சலினாலேயே பாதிக்கப்பட்டுள்ளதாக, பவித்திரா வன்னியாராச்சி தெளிவுபடுத்தினார்.
இலங்கைக்குள் நுழையும் சகல விமானப் பயணிகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதுடன், குறித்த வைரஸ் நாட்டுக்குள் பரவாமல் இருப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக, சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையில் குறிப்பாக வட மாகாணத்தில் தடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் குறித்து இன்று ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..