29,Apr 2024 (Mon)
  
CH
தொழில்நுட்பம்

நஷ்டத்தில் இயங்கும் டிவிட்டர் நிறுவனம்- எலன் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் எலன் மஸ்க். இவர் கடந்த ஆண்டு முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தை 3.61 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வந்தார். ஆயிரக்கணக்கான உயரதிகாரிகள், ஊழியர்களை பணி நீக்கம் செய்து, பின்பு சிலரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார். அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளை குறிக்கும் ப்ளூ டிக்குக்கு சந்தா செலுத்துவதை கட்டாயமாக்கினார். ட்விட்டர் லோகோவையும் மாற்றினார்.



டிவிட்டரில் பதிவிடும் கணக்குகள், டிவிட்டர் பக்கத்தை பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வௌியிட்டு வந்தார்.

எலன் மஸ்க்கின் அதிரடி உத்தரவுகளால் எரிச்சலடைந்த ட்விட்டர் பயனர்கள் அதனை விட்டு வௌியேறி வந்தனர். ட்விட்டரின் பங்குச்சந்தை மதிப்பும் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. விளம்பரதாரர்களும் டிவிட்டரை விட்டு வௌியேறியதால் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதுகுறித்து எலன் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம், “வௌியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள். ட்விட்டர் மீண்டும் லாபத்தை நோக்கி செல்லும்” என்று தெரிவித்திருந்தார்.

 

இதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் விளம்பரத்துறையில் அனுபவம் மிக்க லிண்டா யாக்கரினோ என்பவரை ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் தற்போதும் நஷ்டத்தில் தள்ளாடுகிறது என எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். டிவிட்டரின் வணிகம் தொடர்பாக ஆலோசனை தருவதாக டிவிட்டரில் பதிவிட்ட ஒருவருக்கு எலன் மஸ்க் அளித்துள்ள பதிலில், “டிவிட்டரின் விளம்பரங்கள் 50 சதவீதம் குறைந்து விட்டதால் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. இதனால் கடன் சுமையும் அதிகரித்து விட்டது. வணிகம் குறித்த பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன் டிவிட்டரை லாபத்தை நோக்கி கொண்டு செல்வதில் நான் கவனம் செலுத்த உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.




நஷ்டத்தில் இயங்கும் டிவிட்டர் நிறுவனம்- எலன் மஸ்க்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு