வெள்ளைத்தோல் நடிகர்கள் தான் சினிமாவில் ஹீரோவாக நடிக்க முடியும் என்கிற விதியை ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தி இயக்குநர் கே. பாலசந்தர் எப்படி முறியடித்தாரோ, அதே போலத்தான் சரிதாவையும் அறிமுகப்படுத்தி நடிக்கத் தெரிந்தால் போதும் கருப்பானவர்களும் ஹீரோயினாக நடிக்கலாம் என மரோசரித்ரா படத்தின் மூலம் நிரூபித்தார் பாலசந்தர்.
மரோ சரித்ரா, தப்புத் தாளங்கள் என அடுத்தடுத்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் உடன் நடித்து டாப் ஹீரோயினாக அதிரடி காட்டிய நடிகை சரிதா பல நடிகர்களுக்கே சிம்ம சொப்பனமாக அந்த காலத்தில் இருந்துள்ளார்.
ஆனால், தனது 16 வயதிலேயே நடிகை சரிதா தெலுங்கு நடிகரை திருமணம் செய்துக் கொண்டு அவரை விவாகரத்து செய்த கதையே பலருக்கும் தெரியாது என சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தனது சமீபத்திய பேட்டியில் சரிதாவின் முதல் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
மரோசரித்ரா படத்துக்காக ஹீரோயினை தேடிக் கொண்டிருந்த இயக்குநர் பாலசந்தர் ஒரு திருமண ஆல்பத்தில் 15 வயது இளம் பெண் சரிதாவின் புகைப்படத்தை பார்த்ததும் தனது படத்தின் ஹீரோயின் இவர் தான் என்பதையே முடிவு பண்ணி விட்டாராம். பின்னர், அந்த பெண் யாரென விசாரித்து அவரது பெற்றோர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து 1978ம் ஆண்டு மரோசரித்ரா படம் மூலம் சரிதாவை சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் கே. பாலசந்தர்.
இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர் சரிதா. தண்ணீர் தண்ணீர் படத்தில் எல்லாம் தலையிலும், இடுப்பிலும் குடத்தை வைத்துக் கொண்டு கையில் குழந்தை ஒன்றையும் தூக்கி சுமந்து சரிதா நடித்த நடிப்பையெல்லாம் அதற்கு முன் எந்தவொரு நடிகையும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். சினிமா என்றால் என்ன என்றே தெரியாத தன்னை பாலசந்தர் சார் தான் இந்த பக்கம் நட, அந்த பக்கம் நட என்பார், எனக்கு கோபம் கோபமா வரும். ஆனால், சினிமாவாக பார்க்கும் போது, அது ஒரு அழகான கதையை பேசியிருக்கும். அறிவு கெட்ட முண்டம்னு திட்டுவார் என்னை, அவர் அப்படி திட்டி திட்டித்தான் நான் மக்களுக்கு பிடித்த நடிகையாகவே மாறினேன் என்றும் பேட்டி ஒன்றில் சரிதாவே கூறியுள்ளார்.
நடிகை சரிதா சினிமாவில் நுழைந்த உடன் 16 வயதிலேயே திருமணம் நடைபெற்று விட்டதாம். தெலுங்கு நடிகர் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமண வாழ்க்கை அவருக்கு பெரிதாக செட்டாகாத சூழலில் 6 மாதத்திலேயே அவரை பிரிந்து விட்டதாக செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மீண்டும் நடிகை சரிதா சினிமாவில் நடிக்க ஆரம்பித்துத் தான் பெரிய நடிகையாக வலம் வந்தார் என்றும் செய்யாறு பாலு சமீபத்தில் சரிதாவின் வாழ்க்கையில் நடந்த சோக பக்கங்களை சொல்லி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
அதன் பின்னர் வரிசையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் 10 வருடங்களில் பல படங்களில் நடித்து மிரட்டிய சரிதா 1988ம் ஆண்டு மலையாள நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சரிதா அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார். நடிகர் முகேஷை திருமணம் செய்துக் கொண்ட சரிதா தனது 2 குழந்தைகளை வளர்ப்பதற்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். 2011ம் ஆண்டு நடிகர் முகேஷையும் சரிதா விவாகரத்து செய்து பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் பிரெண்ட்ஸ், ஆல்பம், ஜூன் ஆர், சிலோன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த சரிதா, மீண்டும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மூலம் நடிகையாக கம்பேக் கொடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..