நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா இணைந்து நடத்தும் இப்போட்டி, 32 நாள்களுக்கு நீடித்து ஆகஸ்ட் 20 ஆம் திகதி நிறைவடைகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் முதல் நாளின் ஆட்டங்களில் நியூஸிலாந்து - நேர்வே, அவுஸ்திரேலியா - அயா்லாந்து அணிகள் மோதுகின்றன.
முதல் ஆட்டம், நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகரிலும், அடுத்த ஆட்டம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் நடைபெறவுள்ளன.
நடப்பு சாம்பியனான அமெரிக்கா முதல் ஆட்டத்தில் வியத்நாமை சனிக்கிழமை சந்திக்கிறது. மகளிா் உலகக் கிண்ண போட்டியை ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். அதேபோல், உலகக் கிண்ண போட்டியின் ஆட்டங்கள் இருவேறு கண்டங்களிடையேயான கால்பந்து கூட்டமைப்புகளில் நடைபெறுவதும் இதுவே முதல் முறை. அவுஸ்திரேலியா ஆசிய கூட்டமைப்பிலும், நியூஸிலாந்து ஓசியானியா கூட்டமைப்பிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, மகளிா் உலகக் கிண்ண போட்டிகளில் இதுவரை 24 நாடுகள் பங்கேற்றுவந்த நிலையில், ஆடவா் போட்டிக்கு இணையாக இந்த எடிஷனில் முதல் முறையாக 34 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. சாம்பியன் அணிக்கு ரூ.35 கோடி பரிசாக வழங்கப்படவுள்ளது.
முன்னதாக, உலகக் கிண்ண போட்டிகளில் வெல்லும் பரிசுத் தொகை சம்பந்தப்பட்ட கால்பந்து சம்மேளனங்களால் வீராங்கனைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்று புகாா் எழுந்த நிலையில், இந்த உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு குறைந்தபட்சம் (குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகள்) தலா ரூ.24 லட்சம், அதிகபட்சம் (சாம்பியன் அணி) தலா ரூ.2 கோடி அளிக்கப்படும் ஃபிஃபா தலைவா் கியானி இன்ஃபான்டினோ அறிவித்திருந்தாா்.
எனினும், போட்டிக்கு முன்பாக புதன்கிழமை பேசிய அவா், இந்த விவகாரம் தொடா்பாக சம்மேளனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகவும், அவ்வாறு பரிசுத் தொகையை கொடுப்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறாா்.
மகளிா் உலகக் கிண்ண கால்பந்து போட்டி வரலாற்றில் அதிகபட்சமாக, நடப்பு சாம்பியனான அமெரிக்கா 4 முறை கிண்ண வென்றுள்ளது. அடுத்தபடியாக ஜொ்மனி 2 முறையும், நேர்வே, ஜப்பான் அணிகள் தலா 1 முறையும் வாகை சூடியுள்ளன.
0 Comments
No Comments Here ..