11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை

இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.

இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் நேற்று சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தனர்.

விமான நிலையத்தில் அவர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். சோதனையில் 8 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் சுகாதாரதுறை அதிகாரிகள் சார்பில் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது எனவும், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட சுகாதராத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

சீன நாட்டிற்கு சென்று வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கோவை விமான நிலையத்தில் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்டறிந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் சீனா சென்று விட்டு கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். இவர்கள் பணிக்காவும், சுற்றுலாவுக்காகவும் சீனாவுக்கு சென்று இருந்தனர். கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து இவர்கள் ஊர் திரும்பி உள்ளனர்.

இதில் சென்னை, திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் குறித்து அந்தந்த மாவட்ட சுகாதார துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் கண்காணித்து வருகின்றனர்.

கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேரை எங்கள் சிறப்பு குழு டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது 6 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தினமும் அவர்களின் உடல் நிலை குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். மேலும் அடுத்த 28 நாட்களுக்கு வீட்டிலேயே கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.  




சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு