தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் தேர்தலுக்காகத் தங்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்த அழைப்பை இருவரும் நிராகரித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் ஒற்றைக் கட்சி ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சீமான் மற்றும் விஜய் தரப்புடன் இன்னும் நடைபெறவில்லை என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், எடப்பாடியின் அழைப்புக்கு சீமான் மற்றும் விஜய் தரப்பிலிருந்து மறுப்பு வந்துள்ளது. தேர்தலுக்காகக் கொள்கைகளைக் கைவிட்டு கூட்டணி அமைத்த பல கட்சிகள் காலப்போக்கில் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்ட சீமான், அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி இடம்பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணையாது என அந்தக் கட்சி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..