சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழையும் உரிமையைத் தடுக்கும் எவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழகப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் நடந்ததாகக் கூறப்படும் சாதி பாகுபாடு குறித்து வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர் தனது மனுவில், பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகள் ஒரு பிரிவினரால் இடிக்கப்பட்டதாகவும், பட்டியல் இனத்தவர்கள் கோயிலில் நிறுவப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்குப் பின்னிருந்துதான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஜூலை 16 முதல் 31 வரை நடைபெற உள்ள தேர்த்திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோயிலுக்குள் நுழையவும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புதுக்குடி அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்டப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். அத்துடன், கோயிலில் அனைத்துத் தரப்பு மக்களும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்டப் பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில், "பல்வேறு தலைவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆலய நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை" எனக் குறிப்பிட்டு, சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் எவரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும் எனப் பொலிஸாருக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த உத்தரவு, தமிழகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.













0 Comments
No Comments Here ..