04,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

4ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது அணியாக தம்புள்ள ஒளரா தகுதிபெற்றது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் 4ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது அணியாக தம்புள்ள ஒளரா தகுதிபெற்றது.

கோல் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் முதலாவது தகுதிகாண் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் தம்புள்ள ஒளரா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

கோல் டைட்டன்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஒளரா 19.4 ஓவர்களில் அதாவது இரண்டு பந்துகள் மீதம் இருக்க 4 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


ஹேடன் கேர், நூர் அஹ்மத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இரண்டு குசல்களின் (மெண்டிஸ், பெரேரா) சிறந்த துடுப்பாட்டங்களும் தம்புள்ள ஒளராவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

முன்னதாக கோல் டைட்டன்ஸ் சார்பாக லசித் குரூஸ்புள்ளே தனி ஒருவராக குவித்த அரைச் சதம் வீண்போனது.

தம்புள்ள ஒளரா சார்பாக அவிஷ்க பெர்னாண்டோவும் அணித் தலைவர் குசல் மெண்டிஸும் 22 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோ (24) ஆட்டமிழந்த பின்னர் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம (13) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தொடர்ந்து குசல் மெண்டிஸ், குசல் பெரேரா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு வெற்றியை அண்மிக்க உதவினர். அவர்கள் இருவரும் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.


குசல் மெண்டிஸ் 49 ஓட்டங்களையும் குசல் பெரேரா 39 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களையும் பெற்றனர். (146 - 4 விக்.)

தனஞ்சய டி சில்வா (2 ஆ.இ.), அலெக்ஸ் ரொஸ் (1 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட ஒரு ஓட்டத்தைப் பெற்றுக்கொடுகத்தனர்.

பந்துவீச்சில் ஷக்கிப் அல் ஹசன், சீக்குகே ப்ரசன்ன, தப்ரெய்ஸ் ஷம்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் டைட்டன்ஸ், லசித் குரூஸ்புள்ளேயின் அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

ஒரு பக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க மறுபக்கத்தில் தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்திய ஆரம்ப வீரர் குரூஸ்புள்ளே, தனது அணி கௌரவமான நிலையை அடைய உதவினார்.


பானுக்க ராஜபக்ஷ (0), லிட்டன் தாஸ் (8) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க கோல் டைட்டன்ஸ் தடுமாற்றம் அடைந்தது. (25 - 2 விக்.).

பானுக்க ராஜபக்ஷ இந்த சுற்றுப் போட்டி முழுவதும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார்.

குரூஸ்புள்ளேயும் ஷக்கிப் அல் ஹசனும் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

ஷக்கிப் அல் ஹசன் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் தசுன் ஷானக்க (12) நஜிபுல்லா ஸத்ரான் (2) ஆகிய இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (95 - 5 விக்.)

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குரூஸ்புள்ளே 61 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகளுடன் 80 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஒரு பந்துமீதமிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

இதனிடையே 15 ஓட்டங்களைப் பெற்ற லஹிரு சமரக்கோனுடன் 6ஆவது விக்கெட்டில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.


சீக்குகே ப்ரசன்ன 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, கடைநிலை வீரர்கள் மூவரும் ஓட்டம் பெறவில்லை.

பந்துவீச்சில் ஹேடன் கேர் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நூர் அஹ்மத் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 





4ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது அணியாக தம்புள்ள ஒளரா தகுதிபெற்றது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு