தாயை நிர்வாணப்படுத்தி அவரது மகனை அடித்துக் கொன்ற கொடூரம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இதன் பின்னணி குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு 18 வயதாகும் நிதின் அகிர்வார் மற்றும் அவரது தாயார் ஆகியோர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு நிதின் அகிர்வாரின் சகோதரி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த போலீசார் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.
இதையடுத்து புகாரை திரும்ப பெறுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான விக்ரம் சிங் தாகூர் என்பவர் அகிர்வாரின் வீட்டுக்கு வந்து அவரின் தாய் மற்றும் தங்கையை மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் அவர்கள் புகாரை வாபஸ் பெறாமல் சட்ட நடவடிக்கையை தொடர்வதாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த விக்ரம் சிங் தாகூர் தரப்பினர் கும்பலாக சேர்ந்து நிதின் அகிர்வாரின் தாயார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், அவர்களின் வீட்டையும் சூறையாடியிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் அகிர்வார் வீட்டில் இல்லாமல் வெளியில் சென்றிருக்கிறார். தாயை அடித்த அந்த கும்பல் அதே ஊரின் பேருந்து நிலையத்தில் நிதினை பார்த்து அவரையும் அடித்து தாக்கியுள்ளனர். இதனையறிந்து அவரின் தாயார் அங்கு சென்றிருக்கிறார். இருப்பினும் விடாமல் நிதினை அடித்துக் கொன்ற அவர்கள், அவரது தாயாரை நிர்வாணப்படுத்தி அவமானம் செய்துள்ளனர். நிதினின் சகோதரி அங்கிருந்து தப்பி பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சென்று ஒளிந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து போலீஸுக்கு தகவல் அளித்திருக்கிறார்.
இந்த சம்பவம் சாகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவரின் கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
இதுகுறித்து கூடுதல் எஸ்.பி. சஞ்சீவ் கூறுகையில், ‘தப்பியோடியவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரிவுகள் 307 மற்றும் 302 இன் கீழ் வழக்குப்பதிவ செய்துள்ளோம். எஸ்சி., எஸ்.டி. சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்’ என்று தெரிவித்தார். நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நிதின் அகிர்வாரின் சகோதரி வாக்கு மூலம் அளித்துள்ளார்
0 Comments
No Comments Here ..