02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

வீராங்கனைக்கு உதட்டில் முத்தமிட்ட குற்றச்சாட்டுக்குள்ளான, கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

2023 மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான ஸ்பானிய அணியின் வீராங்கனைகளில்  ஒருவரை அனுமதியின்றி உதட்டில் முத்தமிட்ட குற்றச்சாட்டுக்குள்ளான, அந்நாட்டின் கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ், பீபாவினால் 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 1:0 விகிதத்தில் வென்று ஸ்பானிய மகளிர் அணி முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றது.

இப்போட்டியின் பின்னர் ஸ்பானிய அணி வீராங்கனைகளில் ஒருவரான ஜெனிபவர் ஹேர்மசோவுக்கு, கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் உதட்டில் முத்தமிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


முத்தமிடுவதற்கு ஜெனியிடம் அனுமதி கோரியதாகவும், அதற்கு ஜெனி சம்மதித்த நிலையிலேயே அவரை தான் முத்தமிட்டதாகவும் ரூபியாலெஸ் கூறினார்.

எனினும்,  முத்தத்துக்கு தான் சம்மதிக்கவில்லை என வீராங்கனை ஜெனி கூறினார்.

'அச்சம்பவத்தை நான் விரும்பவில்லை. மனக்கிளர்ச்சியால் தூண்டப்பட்ட பாலியல்ரீதியிலான செயலுக்கு, எனது  தரப்பில் சம்மதம் எதுவும் இல்லாமலேயே பாதிக்கப்பட்டவளகாக உணர்ந்தேன்' என அவர் தெரிவித்துள்ளார்.


ரூபியாலெஸின் செயலை நியாயப்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிடுவதற்கு தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் ஜெனிபர் (33) கூறினார்.

இதையடுத்து, ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் பதவியிலிருந்து ரூபியாலெஸ் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்தன.

தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என 46 வயதான ரூபியாலெஸ் தெரிவித்தார்.

ரூபியாலெஸ் பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால்  தாம் மீண்டும் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ஸ்பானிய மகளிர் உலகக் கிண்ண குழாத்திலுள்ள 23 வீராங்கனைகளும் மேலும் சுமார் 50 தொழிற்சார் வீராங்கனைகளும் அறிவித்தனர்.


போட்டியில் பங்குபற்ற அழைக்கப்பட்டால்  பங்குபற்ற  வேண்டிய கடப்பாடு வீராங்கனைகளுக்கு உள்ளது என ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனம் பதிலளித்தது.

 அதேவேளை, ஸ்பெய்னின் மகளிர் கால்பந்தாட்டச் செயற்திட்டத்தில் அங்கம் வகிக்கும் பயிற்றுநர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான 11 பேர்  கூட்டாக இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.

தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என ஸ்பானிய கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் தொடர்ந்தும் கூறிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், ரூபியாலெஸ் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தான் விசாரிப்பதாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது,

ஆனால். ரூபியாலெஸ் தொடர்பில் வீராங்கனை ஜெனி பொய் கூறியதாக ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனம்  குற்றம் சுமத்தியதுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.


அதையடுத்து ரூபியாலெஸை 90 நாட்களுக்கு சகல விதமான கால்பந்தாட்டச் செயற்பாடுகளிலிருந்தும் தான் இடைநிறுத்துவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தது. 

அதைடுத்து, ஸ்பானிய கால்பந்தாட்டச் ம்மேளனத்தின் உப தலைவர்  பெட்ரோ ரோச்சாவை இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அச்சம்மேளனம் சனிக்கிழமை (26) தெரிவித்துள்ளது.

இந்நிலையில்ரூபியாலெஸுக்கு எதிராக தான் உள்ளக விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக ஸ்பானிய கால்பந்தாட்டச் சங்கம் நேற்று முன்தினம் (27) தெரிவித்துள்ளது.

உலகக்  கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ஸ்பெய்னிடம் தோல்வியுற்ற இங்கிலாந்து அணி வீராங்கனைகளும்  ஜெனிக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது




வீராங்கனைக்கு உதட்டில் முத்தமிட்ட குற்றச்சாட்டுக்குள்ளான, கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு