இந்தியா - உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மதத்திலும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.
இதையடுத்து பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பிப். 6 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது விவாதங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் பிப். 07 உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட முதல் மாநிலமானது உத்தரகாண்ட்.
இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகள் அமலுக்கு வருகின்றன.
அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாகிறது. தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்ய தவறினால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 25,000 அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தையின் சகோதரி (அத்தை, மாமி) யின் மகன் அல்லது மகள் மற்றும் தாயின் சகோதரரின் (மாமா) மகன் அல்லது மகள் என்ற உறவுமுறையும் இடம்பெற்றுள்ளது.
0 Comments
No Comments Here ..