15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

பெற்றோரை கைவிட்டால் 3 வருட சிறை!

மூத்த குடிமக்கள் சட்டமூலத்தின்படி, வயதான பெற்றோரை, அவர்களின் குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் கொடுமைக்கு ஆளாக்குவதோ அல்லது அவர்களின் அனுமதியின்றி முதியோர் இல்லத்தில் சேர்ப்பதோ நிரூபிக்கப்பட்டால், வாரிசுகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். 


சொந்த பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் கொடுமைகளில் இருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாக்க கேரள அரசு முக்கிய சட்டத்தை தயாரித்து வருகிறது. குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் பெற்றோரைக் கைவிட்டால் ஆறு மாதம் முதல் மூன்று வருடம் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் கேரள மூத்த குடிமக்கள் சட்டமூலம் தற்போது சமூக நீதித்துறையிடம் உள்ளது. 


இந்த சட்டமூலம் கேரள சட்ட சீர்திருத்த ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய கேரள மாநில பட்ஜெட்டில் இந்த மசோதா குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம் பெப்ரவரி 15ம் திகதியுடன் தற்போது நடைபெற்று வரும் கேரள சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைவதால், இது தொடர்பான அரசாணையை விரைவில் வெளியிட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.


இந்த சட்டமூலம், 'மாநில மூத்த குடிமக்கள் ஆணையம்' அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. பிள்ளைகளோ, கடமையுள்ள உறவினரோ தங்களைப் பாதுகாக்க மறுத்தால், எந்தவொரு வயதானவரும் இந்த மசோதாவின் படி முன்மொழியப்பட்ட சட்டத்தின் 'பிரிவு 4' ன் கீழ் ஆணையத்தில் புகாரளிக்க முடியும். புகாரின் அடிப்படையில் ஆணையம் விசாரணை நடத்தி உறவினர்களிடம் சமரசம் செய்யும்.


சமரசம் ஏற்படவில்லை என்றால், ஆணையம் இரு தரப்பினரையும் கேட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும், 'பராமரிப்பு ஆணை' தவிர, முன்மொழியப்பட்ட 'முதியோர் பராமரிப்பு மற்றும் நலன்' பிரிவு 7ன் கீழ் அமைக்கப்படும் தீர்ப்பாயத்தால் மட்டுமே வழங்கப்படும். இது தொடர்பான புகாரில், ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என்று மசோதா தெளிவாக கூறுகிறது.


குழந்தைகள், சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது உறவினர்கள் ஆணையத்தின் உத்தரவுக்குக் கீழ்ப்படியத் தவறினால் ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.  வசூலிக்கப்படுகின்ற அபராதத் தொகை புகார்தாரருக்கு வழங்கப்படும். முதியோர்கள் பிச்சை எடுக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்டமூலம் உறுதிப்படுத்துகிறது.


முதியோர் தொடர்பான விடயங்களில் போதுமான அனுபவம் கொண்ட மூத்த குடிமக்களில் ஒருவர், சட்ட அறிவு உள்ளவராக ஒரு உறுப்பினர், ஒரு பெண் உறுப்பினர் என்று மூத்த குடிமக்கள் ஆணையம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஆணையம் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள். திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த ஆணையத்தின் செயலாளராக அரசாங்கத்தின் கூடுதல் செயலாளர் பதவிக்குக் குறையாத அதிகாரி நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.




பெற்றோரை கைவிட்டால் 3 வருட சிறை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு