11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

வருமான வரி நடைமுறையில் புதிய மாற்றம்

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியைக் கணக்கிடுவதில் இதுவரை இல்லாத வகையில் புதியமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கணிசமான அளவு வருமான வரி குறைக்கப்பட்டுள்ள அதேவேளை வரி விலக்கு சலுகைகள் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி கணிக்கிடும் முறையில் சில மாற்றங்கள் செய்து புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை எனவும் அதன் பிறகு கீழ் கண்டவாறு வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.5 இலட்சம் முதல் ரூ.7.5 இலட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20% சதவீத வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 10 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

ரூ.7.5 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 15% வரி மட்டுமே வசூலிக்கப்படும். ரூ.10 இலட்சம் முதல் ரூ.12.5 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 20% வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

ரூ.12.5 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 25% வரி மட்டுமே வசூலிக்கப்படும். ரூ.15 இலட்சத்திற்கு அதிகமான வருவாய்க்கு தற்போதுள்ளபடி 30% வரி தொடரும்.

புதிய திட்டத்தின்படி 5 இலட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்ற சலுகை பெறுவதால் எந்தவொரு வரி விலக்குப் பிரிவும் கணக்கில் கொள்ளப்படாது.

80சி மற்றும் 80டி என்ற வரிச்சலுகை பிரிவுகளின் கீழ் தற்போது எல்.டி.சி., வீட்டு வாடகை, பொழுதுபோக்கு, தனிப்பட்ட வரி, குடியிருக்கும் வீடு மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுக் கடன் வட்டி போன்றவற்றைச் செலுத்தும் தொகைகளுக்கு இனிமேல் வருமான வரிச் சலுகை பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வரும் நிதியாண்டிலும் ஒருவர் முந்தைய வருமான வரித் திட்டத்தின்படி கணக்குத் தாக்கல் செய்ய இயலும். அவ்வாறு செய்தால் 2.5 இலட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வருமான வரி விலக்கு உண்டு. அதற்கு மேல் கீழ்க்கண்டவாறு வரி செலுத்த வேண்டும்.

இதன்படி, ரூ.2.5 இலட்சம் முதல் ரூ.5 இலட்சம் வரை 5 சதவீத வரியும் ரூ.5 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரியும் வசூலிக்கப்படும் என்பதுடன் ரூ.10 இலட்சத்திற்கு மேல் 30% வரி வசூலிக்கப்படும்.

வருமான வரி செலுத்தும் ஒருவர் பழைய அல்லது புதிய திட்டம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அது வரி செலுத்துபவரின் தேர்வுக்கு உட்பட்டது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருமான வரிக் குறைப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





வருமான வரி நடைமுறையில் புதிய மாற்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு