வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக பெங்களூரில் அனாதை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பிகேஹள்ளியில் செயல்பட்டு வரும், அனாதை இல்லத்தில் ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கங்கூனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் சம்பிகேஹள்ளி அனாதை இல்லத்தில், பிரியங்க் கங்கூன் தலைமையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
இதற்கு அனாதை இல்லத்தின் உரிமையாளர் சமீர், உதவியாளர் சல்மா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வந்த ஒரு கும்பல், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பிகேஹள்ளி பொலிஸார் அங்கு சென்று, தகராறு செய்த கும்பலை விரட்டி அடித்தனர். பின்னர் அனாதை இல்லத்தில் சோதனை நடத்தியபோது, இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமியர் மீட்கப்பட்டனர்.
இந்த அனாதை இல்லம் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இலவசமாக அடைக்கலம் தருவதாக கூறிய சிறுமிகளை சேர்த்துள்ளது. ஆனால் அனாதை இல்லத்தில் சேர்ந்த சிறிது நாட்களுக்கு, பள்ளிக்கு சரியாக அனுப்பினர். அதன் பின்னர் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. இருட்டு அறையில் அடைத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்த அந்த சிறுமிகள், எங்களை வளைகுடா நாடுகளுக்கு கடத்த முயற்சி நடக்கிறது என கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த இல்லத்தின் நிர்வாகி சமீர், உதவியாளர் சல்மா உட்பட 20 பேர் மீது, சம்பிகேஹள்ளி பொலிஸில், பிரியங்க் கங்கூன் முறைப்பாடு அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 20 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..