மோடி ரோடு ஷோவில் பள்ளிக் குழந்தைகள் பங்கெடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “ஏப்ரல் 3ம் தேதிக்குள் கோவை சாய்பாபா காலனி காவல்நிலையம் பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில், சாய்பாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை நேற்று (மார்ச் 18) பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட வாகனப் பேரணி நடந்தது.
அப்போது, நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அரசு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நிறுத்தி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஏப்ரல் 3ம் தேதிக்குள் கோவை சாய்பாபா காலனி காவல்நிலையம் பதிலளிக்க வேண்டும். காவல் நிலையம் பதிலளிக்கும் வரை பள்ளி மீது நடவடிக்கை கூடாது” என உத்தரவிட்டார்.
0 Comments
No Comments Here ..