இந்தியாவின் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகிறது.
தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 230க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் இந்தியா கூட்டணி மெகா அணியாக களம் கண்டது.
எதிர்க்கட்சியான அதிமுகவோ, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம் கண்டது.
பாஜகவோ, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தனி அணி அமைத்து களம் கண்டது.
இதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதியிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதிகளில் மட்டும் முறையே பாமக மற்றும் தேமுதிக கடும் போட்டி கொடுத்தது. இருப்பினும் இறுதியில் திமுக கூட்டணியே 40 தொகுதியிலும் வெற்றி பெற்று ஸ்வீப் செய்துள்ளது.
கடந்த 2019 தேர்தலில் தேனியை தவிர 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இம்முறை விட்ட ஒரு தொகுதியையும் தன்வசம் ஆக்கியுள்ளது.
2004ஆம் ஆண்டில் இதே திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்ற நிலையில், 20 ஆண்டுகள் கழித்து அதே வகையிலான பெரும் வெற்றியை தற்போது பெற்றுள்ளது.
0 Comments
No Comments Here ..