T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய (08) இரண்டாவது போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தால் இலங்கை அணி தோல்வியடைந்தது. T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்தது இதுவே முதன்முறையாகும். இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகப்பட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹுசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். அதேபோல், டஷ்கின் அஹமட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் டவ்ஹித் ஹ்ரிடோய் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் நுவான் துஷார நான்கு விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இன்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவிய நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு நுழைவதற்காக வாய்ப்பு மேலும் குறைந்துள்ளது. இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால், இலங்கை எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் மற்றும் தென்னாபிரிக்கா அல்லது பங்களாதேஷ் அணிகள் எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும்.
0 Comments
No Comments Here ..