12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

உபுல் தரங்கவின் சதத்துடன் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை பதினொருவர்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி உபுல் தரங்க மற்றும் அசேல குணரத்ன ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்டங்களின் உதவியுடன் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இந்த அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதும், டெரன் பிராவோவின் சதத்தின் உதவியுடன் 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் டெரன் பிராவோ 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அடுத்த வீரருக்கு வாய்ப்புக் கொடுக்கும் வகையில் களத்தில் இருந்து வெளியேற, சுனில் எம்ரிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தலா 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை U19 அணியின் வேகப் பந்துவீச்சாளராக செயற்பட்டுவந்த டில்ஷான் மதுசங்க 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.

பின்னர், மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, ஆரம்பத்தில் ஒரு ஓட்டத்துக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அனுபவ துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.

இதில், உபுல் தரங்க தனது சதத்தை கடக்க, அசேல குணரத்ன அரைச் சதத்தை பதிவுசெய்தார். இதன்போது இலங்கை கிரிக்கெட் சபை அணி 199 ஓட்டங்களை பெற்றிருந்த போது, உபுல் தரங்க 120 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அசேல குணரத்ன 64 ஓட்டங்களை பெற்றிருந்த போது ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வருகைதந்த துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேற, இலங்கை அணி 253 ஓட்டங்களுக்கு தங்களுடைய 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும், இறுதியாக திக்ஷில டி சில்வா மற்றும் புலின தரங்க ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாட இலங்கை கிரிக்கெட் சபை அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

தீக்ஷில டி சில்வா ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும், புலின தரங்க 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், ஷெல்டன் கொட்ரல், பெபியன் எலன் மற்றும் ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு பயிற்சிப் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கட்டுநாயக்கவில் நடைபெறவுள்ளது.





உபுல் தரங்கவின் சதத்துடன் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை பதினொருவர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு