23,Nov 2024 (Sat)
  
CH
விளையாட்டு

இரு நாடுகளும் வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது: சோயிப் அக்தர் ஆதங்கம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் கடைசியாக 2012-13-ல் நடந்தது. பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இந்தியா வந்தது. அதுவும் 5 வருட இடைவெளிக்குப் பிறகு. இரு நாடுகளும் கடைசியாக 2007-ல்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடியது .

இருநாடுகளுக்கும் இடையிலான தொடர் 2013-க்குப் பிறகு நடைபெறவில்லை என்றாலும், ஐசிசி போட்டிகளிலும் ஆசிய கோப்பைகளிலும் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து சோயிப் அக்தர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நாம் டேவிஸ் கோப்பை விளையாடலாம். ஒருவருக்கொருவர் கபடி விளையாடலாம். பின்னர் கிரிக்கெட் விளையாடுவதில் என்ன தவறு? . இந்தியா பாகிஸ்தானுக்கு வர முடியாது. பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல முடியாது என்று எனக்கு புரிகிறது. ஆனால் நாம் நடுநிலை இடங்களில் ஆசியா கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் விளையாடுகிறோம். இருதரப்பு தொடர்களுக்கும் இதைச் செய்ய முடியவில்லையா?.

நாம் உலகின் மிகச்சிறந்த விருந்தோம்பல் நாடுகளில் ஒன்றாக இருக்கின்றோம். இந்தியா அதை முதலில் பார்த்து உள்ளது. வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் தெண்டுல்கர் போன்றவர்களிடம் கேளுங்கள்.

நமக்கிடையிலான வேறுபாடுகளால் கிரிக்கெட் பாதிக்கப்படக்கூடாது. இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் இருதரப்பு தொடரை விளையாட முடியும் என்று நம்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது முக்கியம்.

பாகிஸ்தான் பயணம் செய்ய மிகவும் பாதுகாப்பான இடம். இந்தியாவின் கபடி அணி வந்தது. அவர்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. வங்காளதேசம் அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வந்தது. ஆனால் இன்னும் சந்தேகங்கள் இருந்தால் நடுநிலை இடங்களை நான் பரிந்துரைக்கிறேன்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கெட் விளையாட முடியாவிட்டால் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும்.

நீங்கள் உறவுகளை துண்டிக்க விரும்பினால் வர்த்தகத்தை நிறுத்துங்கள். கபடி விளையாடுவதை நிறுத்துங்கள். ஏன் கிரிக்கெட் மட்டும்?. அது கிரிக்கெட்டாக இருக்கும் போதெல்லாம் நாம் அதை அரசியல் ஆக்குகிறோம். இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

நாம் வெங்காயம் மற்றும் தக்காளி சாப்பிடுகிறோம். நாம் இனிப்புகளை பரிமாறிக் கொள்கிறோம். பிறகு ஏன் கிரிக்கெட் விளையாட முடியாது?.

இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது வருவாயை கொடுக்கிறது. அது ஊக்கமளிக்கிறது. அழுத்தத்தைக் கையாளக்கூடிய புதிய வீரர்களைப் நாம் பார்க்கிறோம். அனைவரும் முன்வந்து இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களை சாத்தியமாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சோயிப் அக்தர் கூறினார்.




இரு நாடுகளும் வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது: சோயிப் அக்தர் ஆதங்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு