ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாட்டு வீரர்களுடன் இந்திய வீரர்கள் இணைந்து ஆடுவது, ஏலம் முறையில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாயில் எடுக்கப்படுவது ஆகியவற்றால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
13-வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளிலும் இருக்கும் நட்சத்திர வீரர்களை கொண்டு ஆல் ஸ்டார் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலி ஆல் ஸ்டார் போட்டியை மார்ச் 25-ந்தேதி நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் இந்த போட்டி நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஐ.பி.எல். அணியின் நிர்வாகிகள் திடீரென ஆல் ஸ்டார் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.பி. எல். அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு அனைத்து நட்சத்திர வீரர்களும் பங்கேற்கும் வகையில் ஆல் ஸ்டார் போட்டியை மார்ச் 25-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவ்வாறு நடத்தும்போது முதல் நாளே அனைத்து வீரர்களும் அங்கு வரவேண்டும்.அதன் பிறகு போட்டியை முடித்து விட்டு 26-ந்தேதி செல்ல வேண்டும். 29-ந்தேதி ஐ.பி.எல். சீசன் தொடங்கி விடும். நிச்சயம் இது ஆக்கப்பூர்வமானதாக இல்லை. இதை அணி நிர்வாகிகளும் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு அதிகாரி கூறும்போது, “ஆல் ஸ்டார் போட்டியால் முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இந்த சீசனில் அணிகளுக்கு பின்னடைவு ஏற்படும். எனவே எதற்காக விளையாட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்” என்றார்.
இதன் காரணமாக கங்குலியின் கனவான ஆல் ஸ்டார் போட்டி நடைபெறுவதற்கான சாத்தியங்கள் பெருமளவு குறைவு என்று ஐ.பி.எல். வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments
No Comments Here ..