உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ‘ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஸ்தலம்’ என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை தலைவராக நிருத்ய கோபால்தாஸ் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அறக்கட்டளை தலைவர் மற்றும் 3 நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.
இதுகுறித்து அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அப்போது பிரதமர் மோடியிடம் அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டோம். அந்த நிகழ்ச்சிக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ராமர் கோவில் கட்டுமான பணிகள் முரண்பாடு அல்லது வெறுப்புணர்வை தூண்டிவிடாமல் அமைதியாக நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி எங்களிடம் அறிவுறுத்தினார். நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு சம்பத் ராய் கூறினார்.
இதற்கிடையே மத்திய சுற்றுலாத்துறை மந்திரி பிரகலாத் பட்டேல் கூறும்போது, “மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த உள்ளன. ராமர் கோவில் கட்டுவதால் சுற்றுலா தொழில் வளம்பெறும்.அதற்கேற்ப வழிகாட்டிகளுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்க இருக்கிறோம். இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பயிற்சி நிலையம் இதற்கான பயிற்சியை வழங்கும். இதன்மூலம் ரூ.35 லட்சம் கோடி பொருளாதார நாடாக உயரவேண்டும் என்ற இலக்கை அடைய முடியும்” என்றார்.
0 Comments
No Comments Here ..