13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

டென்னிஸ் உலகின் பேரழகி ‘மரியா ஷரபோவா’ ஓய்வு பெற்றார்!

டென்னிஸ் உலகின் பேரழகி என அனைவராலும் புகழப்பட்ட ரஷ்யாவின் முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவா, ஏமாற்றத்துடன் சர்வதேச டென்னிஸ் அரங்கிலிருந்து விடைபெற்றுள்ளார்.

டென்னிஸ் உலகில் 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மகத்தான சாதனை நாயகியாக பார்க்கப்படும் மரியா ஷரபோவா, தடைக்கு பின்னர் எவ்வித சம்பியன் கிண்ணத்துக்கும் முத்தமிட முடியாத ஏக்கத்துடன் டென்னிஸ் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

32 வயதான மரியா ஷரபோவா ஓய்வு குறித்து கூறுகையில், ‘நான் டென்னிஸுக்கு குட்பை சொல்கிறேன். 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுவிட்டேன். என்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம் என்னவென்றால், நான் ஒருபோதும் பின்னோக்கிப் பார்த்தது இல்லை.

முன்னோக்கிப் பார்த்ததும் இல்லை. நான் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்ததால், நிச்சயம் என்னை நம்பமுடியாத இடத்துக்கு நகர்த்தும் என்று நம்பினேன். நான் என்னுடைய வாழ்க்கையை டென்னிஸ் விளையாட்டுக்காக அர்ப்பணித்தேன். டென்னிஸ்தான் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தது.

ஆனால், நான் ஓய்வு பெற்றபின், டென்னிஸ் விளையாட்டை ஒவ்வொரு நாளும் இழப்பேன். பயிற்சியை இழப்பேன். அன்றாட வாழ்க்கையில் டென்னிஸை இழப்பேன். சூரிய உதயத்திலிருந்து மறைவு வரை என்னுடைய பயிற்சிக்காக என்னுடைய காலில் பாதணியை அணிய முடியாது. என்னுடைய பயிற்சியாளர்களை, எனது அணியை அனைவரும் இழக்கிறேன்

நான் இப்போது திரும்பிப் பார்க்கிறேன். நான் டென்னிஸில் மிகப்பெரிய மலையைக் கடந்து வந்திருக்கிறேன். என்னுடைய பாதை முழுவதும் பள்ளத்தாக்குகளும், வேலிகளும் நிறைந்தவை. ஆனால் உச்சியிலிருந்து பார்த்தால் எனது பாதை நம்பமுடியாதவை.

கடந்த 28 ஆண்டுகளாக, டென்னிசுடன் இணைந்து ரசிகர்களையும் ஒரு குடும்பமாக கருதினேன். சிறு வயதிலிருந்து பயிற்சி பெற்ற டென்னிஸ் களத்தை விட்டு எப்படி வெளியேறுவது. சொல்ல முடியாத கண்ணீரை, வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியை தந்த டென்னிஸ் விளையாட்டிலிருந்து எப்படி விடை பெறுவது. என்னை மன்னித்து விடுங்கள், சர்வதேச டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வு பெறுகிறேன்’ என கூறினார்.

கடந்த 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி ரஷ்யாவின் சைபீரியாவில் பிறந்த மரியா ஷரபோவா, கடந்த 1994ஆம் ஆண்டு 700 அமெரிக்க டொலர்களுடன் 7 வயதில், தந்தையுடன் அமெரிக்காவுக்கு சென்று குடியேறினார்.

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று வசித்து வந்தபோதும், ரஷ்ய வீராங்கனையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

மரியா ஷரபோவா. 2004ஆம் ஆண்டு, 17 வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமில் பங்கேற்ற ஷரபோவா, அப்போது உச்சத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று, உலகைத் தன் பக்கம் திரும்பிப்பார்க்கவைத்தார். ஷரபோவா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமே இதுதான்.

முதல் கிராண்ட்ஸ்லாமிலேயே ஜாம்பவானை வீழ்த்தி வெற்றி பெற்றதாலோ என்னவோ, அதுவரை ஷரபோவாவை சாதாரண வீராங்கனையாகப் பார்த்துவந்த இந்த உலகம், அதன்பின் அவரை ஜாம்பவானாக பார்க்கத் தொடங்கியது.

இதன்பிறகு டென்னிஸ் களத்தில் பம்பரமாய் சுழன்று சம்பியன் பட்டங்களை குவிக்க தொடங்கிய ஷரபோவா, அடுத்தடுத்து, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் நான்கு முறை சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸில் 2008ஆம் ஆண்டும், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்ஸில் 2012ஆம் மற்றும் 2014ஆம் ஆண்டும், அமெரிக்க பகிரங்க டென்னிஸில் 2006ஆம் ஆண்டும் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

டபிள்யு.டி.ஏ டென்னிஸ் உலகில் தனது 18ஆவது வயதிலேயே உலகின் மிகச்சிறந்த வீராங்கனை எனும் பெயரெடுத்து தரவரிசையில் ஷரபோவா முதலிடத்தைப் பெற்றார். இதுவரை 36 டபிள்யு.டி.ஏ. சம்பியன் பட்டங்களையும், 4 ஐ.டி.எப். சம்பியன் பட்டங்களையும் ஷரபோவா வென்றுள்ளார்.

கேரியர் கிராண்ட்ஸ்லாம் அதாவது, 4 தொடரிலும் சம்பியன் பட்டம் கைப்பற்றிய ஒரே ரஷ்ய நட்சத்திரம் மரியா ஆகும்.

இரட்டையர் பிரிவில் 3 சம்பியன் பட்டங்கள் கைப்பற்றியுள்ளார். 2012ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார்.

போர்ப்ஸ் பத்திரிகை சார்பில் வெளியிடப்படும், அதிக வருமானம் பெறும் விளையாட்டு நட்சத்திரம் பட்டியலில் பல முறை முதல் இடம் பெற்றவர் ஆவார்.

2007ஆம் ஆண்டு முதன்முதலில் தோள்பட்டை வலியால் ஷரபோவா அவதிப்பட்டார். இருப்பினும் காயத்திலிருந்து மீண்டுவந்து 2008ஆம் ஆண்டில் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸில் சம்பியன் பட்டம் வென்றார். அதன்பின் 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலும் காயத்தால் ஷரபோவா அவதிப்பட்டார்.

அத்தோடு, கடந்த 2019ஆம் ஆண்டு மரியா ஷரபோவா, கடந்த பெப்ரவரி மாதம் வலது கை தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

உலகெங்கிலும் உள்ள பலகோடி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மரியா, கடந்த 2016ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 15 மாதங்கள் தடையைப் பெற்றார்.’மெலடோனியம்’ எனும் மருந்தை அவர் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அந்த மருந்து தடைசெய்யப்பட்டது. ஆனால், ஆய்வு நடந்தது ஏப்ரலில். அவரோ, தான் அந்த மருந்தை கடந்த 10 ஆண்டுகளாகத் தனது மருத்துவத்துக்காகப் பயன்படுத்துவதாகவும், இதைத் தடைசெய்தது தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார். ஆனாலும் தடை நீக்கப்படவில்லை.

தடைக் காலத்தை ஏகபோகமாக அனுபவித்த பின், மீண்டும் டென்னிஸ் களத்துக்கு திரும்பிய போதும், தடையால் கிடைத்த 15 மாத இடைவெளி, அவரது ஆட்டத்தை பெரிதும் பாதித்தது.

பல டென்னிஸ் தொடர்களில், ஆரம்ப சுற்றுகளிலேயே வெளியேறியது உலகம் முழுவதும் இருக்கும் அவரது இரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சிகொடுத்தது.

அத்துடன், சமீபத்தில் நடந்த அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறி தரவரிசையில், 373வது இடத்திற்கு தள்ளப்பட்ட முன்னாள் முதல் நிலை வீராங்கனையான மரியா ஷரபோவா, தடைக்கு பிறகு மீண்டும் டென்னிஸ் விளையாட வந்தபின், தற்போது மூன்று ஆண்டுகளுக்குப்பின் ஓய்வு பெற்றுள்ளார்.

தோல்வியோ… வெற்றியோ, ஷரபோவாவின் விளையாட்டை இரசித்த பல கோடி இரசிகர்களுக்கு அவரின் ஓய்வு அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. ஆனாலும் இத்தனை காலங்கள் இரசிகர்களை கொண்ட வைத்த ஷரபோவாவிற்கு தற்போது பலரும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





டென்னிஸ் உலகின் பேரழகி ‘மரியா ஷரபோவா’ ஓய்வு பெற்றார்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு