கடந்த நொவம்பர் 18 ஆம் திகதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் உலகில் முதன் முறையாக மோனோலித் எனப்படும் மர்ம தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், சில நாட்களில் தூண் மர்மமாக மறைந்தது.
இதனை அடுத்து, ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் அங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விவரமும் தெரியாததால் மர்மம் நீடிக்கிறது.
கண்டுபிடிக்கப்பட்ட தூண்கள் சில நாட்களில் மர்மமான முறையில் மாயமாகி வருகிறது. இங்கிலாந்தில் ஏற்கனவே மூன்று பகுதிகளில் தூண் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மெர்ரி மெய்டன்ஸ் சர்கிள் நடுவில் நான்காவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்து சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணம் கிரானிச்சென் நகரில் உள்ள லைபெக் கோட்டைக்கு வெளியே மர்ம உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் ஒரு நாள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட தூண் தோன்றியபடியே மர்மமாக மறைந்துவிட்டது.
உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூணை பார்த்ததாக தெரிவித்தனர்.
அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென தோன்றிய ஒற்றைத்தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டது. இதுபோன்ற தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் தடவையாகும்.
அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் இந்த தூண் காணப்பட்டுள்ளது. உலோக அமைப்பு தரையில் அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது, ஆனால் அதன் அடிவாரத்தில் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
பூங்காவின் பணிபுரியும் உள்ளூர் தோட்டக்காரரான ஆசாராம், இதுபற்றி கூறுகையில், “நான் மாலையில் வீட்டிற்குச் சென்றபோது, அது இல்லை. ஆனால் மறுநாள் காலையில் நான் வேலைக்குத் திரும்பியபோது, அந்த அமைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.” என்று அவர் கூறினார்.
அகமதாபாத்தின் மர்ம உலோகத் தூண் அமைப்பு ஒரு பேசுபொருளாக மாறியது. பெருமளவில் பூங்காவுக்கு படையெடுத்த மக்கள் அதன் முன் நின்று செல்பிக்களையும் ஆர்வத்துடன் எடுத்துச்சென்றனர்.
இது நெட் பிளிக்கிசின் ‘பிளாக் மிரர்’என்ற தொடரின் விளம்பரம் என வதந்திகள் பரவின.
நியூ மெக்சிகோவில் உள்ள ‘தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட்’ என்ற கலைக்குழு, யூட்டாவில் தூணை வைத்ததாக கூறியது . ஆனால் மற்ற நாடுகளில் தாங்கள் நிறுவவில்லை என தெரிவித்துள்ளது. உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த மர்ம தூண்களை நிறுவியது யார் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.
குஜராத்தின் அகமதாபாத்தில் பூங்காவில் நிறுவிய உலோகத்தூண் தனியார் நிறுவனம் ஒன்றால் நிறுவப்பட்டது என தெரியவந்ததால், பிற நாட்டில் நிலவியதைப் போல நீண்ட நாட்கள் மர்மம் இங்கு நீடிக்கவில்லை.
அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பூங்காக்கள் மற்றும் தோட்ட உதவி இயக்குநர் திலிபாய் படேல் கூறும்போது பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பான தனியார் நிறுவனத்தால் இந்த உலோகத்தூண் நிறுவப்பட்டதாகக் கூறினார்.
0 Comments
No Comments Here ..