இந்த வருடப் பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமாக அமையப் போகிறது.
வழக்கமாக, திரையரங்குகளில் மட்டும் தான் புதுப்படங்கள் பண்டிகை சமயங்களில் வெளியாகும். இந்தமுறை மூன்று வகையில் புதிய படங்கள் வெளியாகவுள்ளன.
திரையரங்கில் இரு படங்கள், ஓடிடியில் ஒரு படமும் தொலைக்காட்சியில் ஒரு படமும் நேரடியாக வெளியாகவுள்ளன.
பொங்கலுக்கு ஜனவரி 13 அன்று விஜய் நடித்த மாஸ்டர் படமும் ஜனவரி 14 அன்று சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை – அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. மாஸ்டர் படம், ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் – ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இசை – தமன். ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துத் தந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சிம்பு.
மாதவன் நடித்த மாறா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜனவரி 8 அன்று நேரடியாக வெளியாகவுள்ளது.
மலையாள வெற்றிப் படமான சார்லி, தமிழில் மாறா என ரீமேக் ஆகியுள்ளது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவடா நாயர், மெளலி, அலெக்ஸாண்டர் பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – ஜிப்ரான். அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கியுள்ளார்.
இதுதவிர விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்கிற படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. இந்தப் படம் ஜனவரி 14 அன்று சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
0 Comments
No Comments Here ..