11,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

பெங்களூருவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய பெங்களூரு அணி 38 ரன் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. அபாரமாக ஆடிய டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் சரவெடி போல ரன் சேர்த்தனர்.


இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணி 3 வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடியது. டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ரஜத் படிதர் தேர்வானார். கோல்கட்டா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.


 ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி (5), ரஜத் படிதர் (1) ஏமாற்றினர். பின் இணைந்த தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. சாகிப், வருண் சக்கரவர்த்தி பந்தில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய மேக்ஸ்வெல், 28 பந்தில் அரைசதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது பிரசித் கிருஷ்ணா பந்தில் படிக்கல் (25) அவுட்டானார்.


 அடுத்து வந்த டிவிலியர்ஸ், வருண், கிருஷ்ணா வீசிய 15, 16வது ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்தார். கம்மின்ஸ் ‘வேகத்தில்’ மேக்ஸ்வெல் (78) வெளியேறினார். ரசல் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த டிவிலியர்ஸ், ஹர்பஜன் பந்தை சிக்சருக்கு அனுப்பி 27 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், ரசல் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசினார்.


பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன் குவித்தது. டிவிலியர்ஸ் (76), ஜேமிசன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.


 கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில் (21), ராகுல் திரிபாதி (25), நிதிஷ் ராணா (18) ஏமாற்றினர். யுவேந்திர சகால் ‘சுழலில்’ தினேஷ் கார்த்திக் (2) சிக்கினார். கேப்டன் மார்கன் (29), சாகிப் அல் ஹசன் (26) நிலைக்கவில்லை. சகால் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்சர், ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசிய ரசல் (31), ஹர்ஷல் படேலிடம் சரணடைந்தார். ஜேமிசன் ‘வேகத்தில்’ கம்மின்ஸ் (6) வெளியேறினார்.


கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஹர்பஜன் (2), வருண் சக்கரவர்த்தி (2) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஜேமிசன் 3 விக்கெட் வீழ்த்தினார். முதலிரண்டு போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகளை வீழ்த்திய பெங்களூரு அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.




பெங்களூருவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு