21,Mar 2026 (Sat)
  
CH
சினிமா

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலி காரணமாக இன்றுஅதிகாலை உயிரிழந்தார்...

பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, ஒளிப்பதிவாளராக மாறி, பின் வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். கொரோனா உள்ளிட்ட வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை எடுத்துக் கொண்டு தனியார் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனால், அவரது உயிரை காப்பாற்றமுடியவில்லை. இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


1966ம் ஆண்டு அக்., 30ம் தேதி சென்னையில் பிறந்தவர் கே.வி.ஆனந்த். பத்திரிகை துறையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின் சினிமாவிற்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து அவருடன் கோபுர வாசலிலே, அமரன், தேவர் மகன், திருடா திருடா உள்ளிட்ட பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.


மலையாளத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் தான் இயக்கிய தென்மாவத்து கொம்பத்து என்ற படத்திற்காக பி.சி.ஸ்ரீராமை அணுகினார். ஆனால் அவர் வேறு படங்களில் பிஸியாக அவரால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதையடுத்து அவரின் சிபாரிசின் பேரில் கே.வி.ஆனந்த் அந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முதல் படத்திற்கே சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றார். தமிழில் ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றிய முதல்படம் காதல் தேசம். அதன்பின் நேருக்கு நேர், முதல்வன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.


அதையடுத்து 2005ல் ஸ்ரீகாந்த் நடித்த ‛கனா கண்டேன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‛அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான்' படங்களை இயக்கி உள்ளார். இவற்றில் சூர்யாவை வைத்து மட்டும் 3 படங்களை இயக்கி உள்ளார்.


கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் காலமானார். அந்த சோகத்தில் இருந்தே திரையுலகம் மீளாத நிலையில் அடுத்து கே.வி.ஆனந்தை இழந்திருக்கிறது. கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


கே.வி.ஆனந்த்தின் உடல் அஞ்சலிக்காக சென்னை, அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.




பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலி காரணமாக இன்றுஅதிகாலை உயிரிழந்தார்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு