தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், நேரம் செல்லச்செல்ல நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. திமுக தனிப் பெரும்பான்மையாக 119 தொகுதிகளிலும், திமுக கூட்டணி மொத்தமாக 153 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்தும் திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த அவரது மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக போகிறவருமான உதயநிதி ஸ்டலின் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை பரிசாக அளித்துள்ளார்.
முன்னதாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் ஏற்பட்டு வரும் தாமதத்தை சுட்டிக் காட்டும் வகையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை காட்டி உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டிய நிலையில், குறிப்பாக எய்ம்ஸ் செங்கல் பிரசாரம் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. திமுகவின் இன்றைய வெற்றி முகத்துக்கு அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் வெற்றியை சமர்ப்பிக்கும் விதமாகவும், இனிமேல் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர வேண்டியது உள்ளிட்ட தமிழக மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு வந்து நல்லாட்சியை தர வேண்டியது என்பதை குறிக்கும் பொருட்டும் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை பரிசாக அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
0 Comments
No Comments Here ..