கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர் ராமசுந்தரம், மருந்தாளுநர் கார்த்திக்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை, கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படுவோருக்கு எந்தவித தடையுமின்றி சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவது, போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பு வைத்தல், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரித்தல், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை போதுமான அளவில் வழங்குதல் உட்பட பல்வேறு நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்துகளை சிலர் பதுக்குவதாகவும், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியம் மருத்துவர் ராமசுந்தரம் (25), ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குடிமை பொருள் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமை பொருள் ஆய்வாளர் தன்ராஜ் தலைமையிலான போலீஸார் சாதாரண உடையில் கண்காணித்தனர். கிண்டி பேருந்து நிலையம் அருகே, மருத்துவர் ராமசுந்தரத்தின் கார் வந்ததை கண்டறிந்து அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது காரில் 12 ரெம்டெசிவிர் மருந்துகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அதே மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரியும் ஆலந்தூரைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவரையும் கைது செய்தனர்.
போலீஸாரின் விசாரணையில், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த மருந்தை திருடிய கார்த்திக், அதை மருத்துவர் ராமசுந்தரத்திடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்ததும், அதனை டாக்டர் ராமசுந்தரம் கள்ளச் சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்று அதிக லாபம் சம்பாதித்திருப்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி அதை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக ஏற்கனவே 10-ம் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..