“உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகின்றது. உங்கள் தாடி முகத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. உங்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். வவுனியாவில் ஒரு கூட்டத்திற்கு வருவதாக இருந்தது. அப்போது சந்திக்க எதிர்பார்த்தேன். ஆனால் அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. ஆகவே நீங்கள் வருவதாக அறிந்ததும் நான் அவசர அவசரமாக இங்கு வந்தேன்” என ரஜினி தெரிவித்தார்.
ரஜினி எளிமையானவர். ஆன்மீக பக்தர். நான் அவரை சந்தித்தது குறித்து விமர்சிப்பவர்கள், ஒரு முறை ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.
விக்னேஸ்வரன்- ரஜினிகாந்த் சந்திப்பு தொடர்பில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்களிற்கு பதிலளிக்கும் விதமாக, க.வி.விக்னேஸ்வரன் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே மேற்படி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில்,
ரஜனியை நான் சென்று பார்த்து வந்தது உண்மையே. அது ஒரு தனிப்பட்ட விஜயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. திரு.அசோக் வெங்கட் அவர்கள் 11ந் திகதி மாலை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த போது “ரஜனியைப் பார்க்க வருகின்றீர்களா? அவரின் அலுவலகத்தில் இருந்து பேசி இன்று மாலை என்னால் சந்திப்பை உறுதிப்படுத்த முடியும்” என்று கூறினார். மாலை 6 மணிக்குப் பின் என் மற்றைய சந்திப்புக்கள் முடிந்து ஹொட்டேலுக்குச் செல்வதாக இருந்தது. ஆகவே 6 மணிக்குப் பின்னர் என்றால் அவரை சந்திக்க முடியும் என்றேன்.
அசோக் ரஜனியின் காரியதரிசியுடன் பேசி இருக்கின்றார். நான் சந்திக்க வருவதாகக் கூறப்பட்ட போது ரஜனி மகாபலிபுரத்தில் இருந்த தனது தோட்ட வீட்டில் இருந்து உடனே அவரின் போயஸ் கார்டின்ஸ் வீட்டுக்கு வருவதாகக் கூறி என்னை மாலை 06.30 மணியளவில் சந்திக்க முடியும் என்று கூறியிருந்தார். நான் அங்கு சென்று அவர் வீட்டின் முன்பக்கத்தில் இறங்கியதும் ஒருவர் என் கையைப் பற்றிக் கொண்டு “வாருங்க! வாருங்க! எப்படி இருக்கிறீங்க?” என்று கேட்டார். சற்று இருட்டாக அந்த இடத்தில் இருந்தது. கூர்ந்து பார்த்த போது சாக்ஷாத் ரஜனியே அங்கு நின்றார்!
0 Comments
No Comments Here ..