இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
அந்தவகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான தீரமானம் மிக்க, 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இந்நிலையில் முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் 3 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து அணித்தலைவர் ஆரோஞ் பிஞ்ச் 19 ஓட்டங்களைப் பெற்றவேளை ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவன் சுமித் மற்றும் மார்னஸ் லபுஸ்சங்னே ஆகியோரின் இணைப்பாட்டம் அணினயை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றது. இதன்படி அவுஸ்ரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பாக, ஸ்டீவன் சுமித் ஒரு சிக்ஸ், 14 பௌன்ட்ரி உள்ளடங்கலாக 131 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன், மார்னஸ் லபுஸ்சங்னே 54 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹரே 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக, மொஹம்மட் ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் நவ்தீப் ஷைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் பதிலுக்கு 287 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரோஹித் ஷர்மாவின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி, 47.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதன்படி இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
அணிசார்பாக, ரோஹித் சர்மா 6 சிக்ஸ், 8 பௌன்ட்ரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் அணித்தலைவர் விராட் ஹோக்லி 89 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதேவேளை, ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், மனிஸ் பான்டே ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களையும் பெற்று களத்தில் நின்றனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹஸல்வூட், அஷ்ரன் அகர் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 வெற்றிகளைப் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றியுள்ளது.
0 Comments
No Comments Here ..