16,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிய விரக்தியில் விசம் குடித்த பெண்

எட்டயபுரம் அருகே நக்கலக்கட்டையைச் சேர்ந்த பெண் தனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் விசம் குடித்து மயங்கினார்.


கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு பேரனுடன் வந்த பெண் திடீரென விசம் குடித்ததாகக் கூறி மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறை அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் எட்டயபுரம் வட்டம் கீழஈரால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நக்கலக்கட்டையைச் சேர்ந்த சக்கரச்சாமி சண்முகவேல்தாய் (58) என்பது தெரியவந்தது. தகவல் அறிந்து அவரது மகன் செந்தில்குமார் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.


அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது தாய் சண்முகவேல்தாய் என்னுடன் தான் வசித்து வருகிறார். எனது தாய்மாமா முத்தால்ராஜ், எங்கள் ஊரில் 7.5 ஏக்கர் நிலம் வாங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நக்கலக்கட்டை கிராமத்தில் ஊர்க்கூட்டம் நடத்தினார்கள். இதில், எனது தாய்மாமா முத்தால்ராஜ், அவரது சகோதரர்கள் வேல்சாமி, சண்முகவேல்சாமி, வேல்சாமி மகன் பாலமுருகன், எனது தாய் சண்முகவேல்தாய், எனது சகோதரி வேல்கண்ணம்மா என 6 பேரின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக முடிவெடுத்தனர்.


இதனால் எங்களது குழந்தைகள் பள்ளிக்கு ஆட்டோவில் செல்ல முடியவில்லை. ஊரில் உள்ள கடைகளில் பொருட்கள் தர மறுக்கின்றனர். கோயிலுக்குக் கூட செல்ல முடியவில்லை. இது தொடர்பாக நாங்கள் பலமுறை மனு வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் 6 பேரின் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


இதுகுறித்து கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் கேட்டபோது, “கீழஈரால் பஞ்சாயத்து நக்கலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தாக வந்த புகார் தொடர்பாக, ஊரில் உள்ளவர்களை வரவழைத்துக் கூட்டம் நடத்தினோம்.

 

இதில் யாரும் யாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கவில்லை எனத் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.


இந்நிலையில், சண்முகவேல்தாய் இன்று எனது அலுவலகத்துக்கு வந்து விஷமருந்தி மயங்கியது தெரியவந்தது. ஆனால், அவர் என்னிடம் எந்த மனுவும் அளிக்கவில்லை. அவர் விசமருந்தியது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.


கோட்டாட்சியர் வளாகத்தில் சண்முகவேல்தாய் விசம் குடித்தது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.




குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிய விரக்தியில் விசம் குடித்த பெண்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு