சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
அதேநேரம், இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.
ஹராரே நகரில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று (22) நிறைவுக்கு வரும் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் பிரமாண்ட முதல் இன்னிங்ஸினை (515) அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி 30 ஓட்டங்கள் பெற்றிருந்தது. களத்தில், பிரின்ஸ் மெஸ்வோர் 15 ஓட்டங்களுடனும், ப்ரையன் முட்சின்கன்யமா 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று (23) போட்டியின் ஐந்தாவதும் கடைசியுமான நாளில் தமது முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் (358) காரணமாக 127 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை முன்னெடுத்தது.
ஐந்தாம் நாளுக்கான போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே, ஜிம்பாப்வே வீரர்கள் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மாலின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினர். அதன்படி, சுரங்க லக்மால் ஜிம்பாப்வே அணியின் முன்வரிசை வீரர்கள் மூவரையும் ஓய்வறை அனுப்ப அவ்வணி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இன்னலை சந்தித்தது. எனினும், பின்னர் களம் வந்த ஜிம்பாப்வே அணியின் தலைவர் ஷோன் வில்லியம்ஸ் மற்றும் ப்ரென்டன் டெய்லர் ஆகியோர் பொறுமையான முறையில் ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர்.
இவர்களது பொறுமையான காரணமாக ஜிம்பாப்வே அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 79 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்ட நிலையில், இரு வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே அணியின் நான்காம் விக்கெட்டாக மாறிய ப்ரென்டன் டெய்லர் 38 ஓட்டங்கள் பெற, ஐந்தாம் விக்கெட்டான ஷோன் வில்லியம்ஸ் 39 ஓட்டங்கள் பெற்றார்.
தொடர்ந்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த சிக்கந்தர் ரஷா ஜிம்பாப்வே அணியின் இன்னிங்ஸ் தோல்வியை தடுக்க ரெகிஸ் சகப்வா உடன் இணைந்து போராடினார். சிக்கந்தர் ரஷாவின் போராட்டம் வெற்றியளித்த போதிலும் அவர் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஐந்தாம் நாளின் மூன்றாம் இடைவெளிக்கு முன்னதாக 148 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து ஜிம்பாப்வே அணி தடுமாறியது.
தொடர்ந்து இலங்கை வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் மூன்றாம் இடைவெளியில் 92 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, 170 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டம் சார்பில் பின்வரிசையில் காண்பித்த ரெகிஸ் சகப்வா 142 பந்துகளுக்கு 26 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் அசத்தலாக செயற்பட்ட சுரங்க லக்மால் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.
ஜிம்பாப்வே அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 14 ஓட்டங்கள் மாத்திரமே இலங்கை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை இலங்கை கிரிக்கெட் அணி விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 3 ஓவர்களில் அடைந்து கொண்டது. இலங்கை அணியின் வெற்றியினை திமுத் கருணாரத்ன 10 ஓட்டங்கள் பெற்றும், ஒசத பெர்னாந்து 4 ஓட்டங்கள் பெற்றும் உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருது, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் இரட்டைச்சதம் கடந்த அஞ்சலோ மெதிவ்ஸிற்கு வழங்கப்பட்டது. அதேநேரம், இப்பபோட்டியில் கிடைத்த வெற்றியுடன் தமது ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, ஹராரே இல் நடைபெறவுள்ள தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டியில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) விளையாடவுள்ளது.
0 Comments
No Comments Here ..